ஆசிரியர் மீது ரவுடி கும்பல் கொலைவெறி தாக்குதல் கண்காணிப்பு கேமராவில் 'பகீர்' காட்சிகள் பதிவு

சென்னை: கோடம்பாக்கத்தில், தனியார் பள்ளியை சூறையாடிய ரவுடி கும்பல், உடற்கல்வி ஆசிரியர் மீது, கொலைவெறி தாக்குதல் நடத்தி, சுயநினைவை இழக்க செய்தது. இந்த பகீர் காட்சிகள், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில், பதிவாகியுள்ளன.

கோடம்பாக்கம், யுனை டெட் இந்தியா காலனியில் உள்ள, லயோலா பள்ளியில், அர்னால்டு என்ற சிறுவன், ௮ம் வகுப்பு படிக்கிறார். அவர், அதேபகுதியில், 'ரிச் இண்டியா' என்ற பெயரில், மென்பொருள் நிறுவனம் நடத்திவரும் அருளானந்தனின் மகன் ஆவார். நேற்று முன் தினம், உடற்கல்வி ஆசிரியர் பாஸ்கரன், விசில் அடித்து, மாணவர்களை வரிசையில் செல்லுமாறு கூறியுள்ளார். அப்போது, உடற்கல்வி ஆசிரியரை பின்தொடர்ந்து சென்ற அர்னால்டு, நக்கலாக விசில் அடித்து, கிண்டல் செய்துள்ளார். ஆசிரியர் கண்டித்துள்ளார். அதனால், மாணவன், மதிய உணவு உட்கொள்ளவில்லை. லேசான காய்ச்சலும் இருந்துள்ளது. அதையடுத்து, உதவி தலைமை ஆசிரியர் அல்போன்ஸ், மாணவனின் தாய் அருணாவிடம், மாணவனை அனுப்பி வைத்துள்ளார்.

தனியார் பள்ளி ஆசி­ரியர் தாக்­கப்­பட்ட சம்­ப­வங்கள், பள்­ளியில் உள்ள கண்­கா­ணிப்பு கேம­ராவில் பதி­வாகி உள்­ளன. ஆசி­ரியர் பாஸ்­கரை தேடி சிலர் வரு­கின்­றனர்
வெறியாட்டம் அவர்கள் சென்ற சில மணிநேரத்தில், காவலாளியை அடித்து உதைத்துவிட்டு, மூன்று பேர், பள்ளியின் உட்புறத்தில், 'பாஸ்கரன் யாருடா' என, கத்தினர். விபரீதம் அறியாது, ''நான் தான் பாஸ்கர்,'' என, உடற்கல்வி ஆசிரியர் தெரிவித்தார்.

இதற்கிடையில், மேலும் பத்து பேர் வந்தனர். ஆசிரியர் பாஸ்கரன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். பள்ளி தாளாளர் அறைக்குள் தள்ளி, அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர். அத்துடன், வகுப்பறையில் கிடந்த நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்களையும் சூறையாடினர்.

இதனால், ஆசிரியர்கள், மாணவர்கள், உயிர் பயத்தில் அங்கேயே உறைந்து போயினர். தகவல் அறிந்த சக மாணவர்களின் பெற்றோர், பள்ளிக்கு ஆதரவாகவும், தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு கோரியும், நேற்று முன்தினம் பள்ளி முன் திரண்டனர்.

19 பேர் கைது

தகவல் அறிந்து, உயர் போலீஸ் அதிகாரிகள், சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவத்தின் பின்னணியில், அருளானந்தம், தாதா போல் செயல்பட்டது தெரியவந்தது.

ரவுடிகும்பல் மீது வழக்கு பதிவு செய்ய கோரி, நேற்று முன்தினம் இரவு நெடுநேரம் வரை, பள்ளி வளாகத்தில் உள்ள சர்ச்சில், நுாற்றுக்கணக்கான பெற்றோர் திரண்டுஇருந்தனர்.

அதையடுத்து, ௨௦ பேர் மீது நேற்று முன்தினம் நள்ளிரவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பெற்றோரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தனிப்படை அமைப்பு

இதற்கிடையே, நேற்று காலை, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.அருளானந்தம், அவரது மனைவி உட்பட, அனைவரையும் கைது செய்யும் வரை, இந்த இடத்தை விட்டு செல்ல முடியாது என, பெற்றோர் தெரிவித்தனர். இதனால், கோடம்பாக்கத்தில் இருந்து, போரூர் வரை, பல மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அதையடுத்து, கமிஷனர் ஜார்ஜ், சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரித்தார். தவறு செய்தோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, அவர் உறுதி அளித்ததுடன், தனிப்படை அமைத்தும் உத்தர விட்டார். தனிப்படை போலீசார், அருளானந்தம் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவர் எனவும் தெரிவிக்கின்றனர். இந்த வழக்கில், நேற்று இரவு வரை, 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பள்ளி தாளாளர், எட்வர்டு செல்வராஜ் கூறுகையில்,''இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்ற உத்தரவிட்டு, எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும்,'' என்றார்.





இந்த நிகழ்வு, அதிர்ச்சியை தருகிறது. இந்த வன்முறையால், பள்ளிக்கூடத்திற்கு குழந்தைகளை அனுப்பி வைக்க பயமாக இருக்கிறது. இதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிளாரியோஸ்,கோடம்பாக்கம்




பள்ளி வளாகத்திற்குள் புகுந்து, ரவுடிகளால் தாக்கப்பட்ட ஆசிரியருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். பள்ளியின் பாதுகாப்புக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எல்ஷியஸ் பெர்னாண்டோ கோடம்பாக்கம்