பதிவு செய்தும் இன்னும் ஆதார் அட்டை கிடைக்கலையா? "ஆன்-லைனில்' பதிவிறக்கம் செய்ய வசதி

 உடற்கூறுகள் பதிவு செய்தவர்களில் இன்னும் பலருக்கு அடையாள அட்டை கிடைக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. அதனால், "ஆன்-லைன்' மூலமாக, ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது, என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
        திருப்பூர் மாவட்டத்தில், கடந்தாண்டு ஜூலை மாதம், தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் ஆதார் அடையாள அட்டைக்கான பதிவு முகாம் நடைபெற்றது. ஏழு தாலுகாக்களிலும் முதல்கட்ட முகாம் நிறைவடைந்தது. மக்கள் குடிபெயர்வது அதிகமாக இருந்ததால், ஆதார் பதிவில் விடுபட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. விடுபட்டவர்களுக்காக இரண்டாம் கட்ட முகாம், பிப்., மாதம் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது. கிராம நிர்வாக அலுவலகங்கள் மற்றும் வரி வசூல் மையங்களில் படிவம் பெற்று, விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது விடுபட்டவர்களும்., அதன்படி விண்ணப்பித்துள்ளனர்.
         திருப்பூர் மாவட்டத்தில் கண்டறியப்பட்ட 23 லட்சம் பேரில், 15 லட்சத்து 700 பேரிடம் முதல்கட்ட பதிவு முடிந்துள்ளது. உடற்கூறு பதிவு செய்தவர்களுக்கு, இரண்டு மாதங்களுக்குள் தபால் மூலம் ஆதார் அட்டை அனுப்பி வைக்கப்படுகிறது. மொபைல் எண் கொடுத்திருந்தால், எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முறையாக பதிவு செய்தவர்கள், தபாலுக்காக காத்திருக்காமல், "ஆன்-லைன்' மூலமாக அட்டைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆதார் அட்டை பதிவு திட்ட அதிகாரிகள் கூறியதாவது:
     ஆதார் அட்டை பெற வேண்டியவர்கள், http://resident.uidai.net.in/web/resident/ chekaadhaarstatus என்ற இணைதளமுகவரியில் சென்று, தங்களது கார்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம். பதிவை உறுதி செய்தபின், http://eaadhaar.uidai.gov.in என்ற முகவரியில், தங்களின் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.ஆதார் அட்டையில் தவறான விவரங்கள் பதிவாகியிருந்தால், http://resident.net.in /updatedata என்ற இணையதள முகவரிக்கு சென்று, விவரங்களை சரிசெய்து, பிறகு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒவ்வொருவருக்கும், பிரத்யேக ஆதார் எண் வழங்கப்படுவதால், "ஆன்-லைனில்' பதிவிறக்கம் செய்வதில் பிரச்னை வராது. ஆதார் விவரங்களை தெரிந்துகொள்ள, 1800 300 1947 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

எஸ்.எம்.எஸ்., வசதி : பதிவு செய்தும், ஆதார் அட்டை கிடைக்காதவர்கள், மொபைலில் uid என டைப் செய்து ஒரு இடைவெளி விட்டு, status என டைப் செய்து, முகாமில் வழங்கப்பட்ட ஒப்புகை சீட்டில் உள்ள 14 இலக்க எண்ணை டைப் செய்து, 51969 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும். அரை மணி நேரத்துக்குள், ஆதார் அட்டை குறித்த தகவல் எஸ்.எம்.எஸ்., வாயிலாக அனுப்பி வைக்கப்படும். இதுவரை பதிவு செய்யாதவர்கள், வரும் ஜன., மாதம் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பித்து, பதிவு செய்து, அட்டை பெற்றுக்கொள்ளலாம், என, அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.