சென்னையில் புதிய மருத்துவ கல்லூரி கட்டட பணியை விரைந்து முடிக்க உத்தரவு

சென்னையில், அரசு பல்நோக்கு மருத்துவமனையை ஒட்டி கட்டப்பட்டு வரும், புதிய மருத்துவக் கல்லூரி கட்டடப் பணிகளை, மார்ச் மாதத்திற்குள் முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, ஓமந்தூரார் தோட்டத்தில் அமைக்கப்பட்ட, புதிய தலைமைச் செயலக கட்டடம், அரசு பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இதன் அருகில், புதிய அரசு மருத்துவக் கல்லூரி துவக்க அரசு திட்டமிட்டது. 100 எம்.பி.பி.எஸ்., இடங்களுடன், அடுத்த கல்வியாண்டு முதல், இந்த கல்லூரி செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதற்காக, முதல்வராக சாந்திமலர் நியமிக்கப்பட்டு, இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி பெறும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதற்காக, மருத்துவமனையை ஒட்டிய பகுதி யில், 123 கோடி ரூபாய் செலவில், மருத்துவக் கல்லூரிக்கான, புதிய கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது. 70 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில், வரும் ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்க, பொதுப்பணித்துறை திட்டமிட்டு இருந்தது. அடுத்த கல்வியாண்டில், மருத்துவக் கல்லூரி செயல்பாட்டுக்கு வர உள்ள தால், மார்ச் மாதத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, மீதமுள்ள, 30 சதவீத பணிகளை, மார்ச் மாதத்திற்குள் முடிக்கும் வகையில், பணிகளை பொதுப்பணித்துறை விரைவுபடுத்தி உள்ளது.