சம்பளப்பிரிவினர் மற்றும் நடுத்தர மக்கள் மீது சுமையை அதிகரிக்க விரும்பவில்லை: அருண் ஜேட்லி

சம்பளப்பிரிவினர் மற்றும் நடுத்தர மக்கள் மீது வரிச்சுமையை ஏற்ற விரும்பவில்லை என்கிறார் அருண் ஜேட்லி. | கோப்புப் படம்.நாட்டின் சம்பளம் வாங்கும் பிரிவினர் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் மீது அதிக வரிச்சுமையை ஏற்ற விரும்பவில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.


ஆனால், வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது கடுமையாக பிடி இறுகும் என்று அவர் உறுதி அளித்தார்.

பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அருண் ஜேட்லி பேசும்போது மேலும் தெரிவித்ததாவது:

வரி அடித்தளத்தை பரவலாக்குவது என்பதன் அர்த்தம் என்ன? நான் எவ்வளவு மறைமுக வரி செலுத்துகிறேனோ அதையேதான் மற்றவர்களும் செலுத்துகின்றனர். ஆனால் நம்மிடையே நுகர்வின் அளவு வித்தியாசமாக இருக்கலாம். ஆகவே, அனைவரும் மறைமுக வரி செலுத்துகிறோம்.

நேரடியாகக் கூற வேண்டுமென்றால், நாம் செலுத்தும் வரிகளில் பாதி அளவு மறைமுக வரிகளே. கலால் வரி, சுங்க வரி, சேவை வரி என்று வரி செலுத்துகிறோம். வருமான வரியைப் பொறுத்தமட்டில் வரி ஏய்ப்பவர்களை வரிவலைக்குள் கொண்டு வருவதே வரிவலையை பரவலாக்குவது என்பதன் பொருள்” என்றார்.

வரி அடிப்படையை பரவலாக்கி வருவாயைப் பெருக்குவதுதானே அரசின் திட்டம் என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்.

கடந்த நிதிநிலை அறிக்கையில், வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதனை மேலும் உயர்த்த வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அருண் ஜேட்லி, “இப்போது ரூ.2.5 லட்சம் என்று நாம் பேசுவதெல்லாம், பிடித்தங்கள் போக. ஆண்டுக்கு ரூ.3.5 அல்லது ரூ.4 லட்சம் சம்பாதிப்பவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை. எனவே இந்த நிலைக்கு நாம் பரவலாக வந்தடைந்துள்ளோம்.

மாதம் ரூ.35,000 முதல் ரூ.40,000 ஆயிரம் வரை சம்பாதிக்கும் ஒருவர், அதில் ஒரு பகுதியை சேமிப்பில் இடுகிறார் என்றால் அவர் வரி கட்ட வேண்டியதில்லை. ஆனால், இந்த சம்பளப்பிரிவினர் என்ன கூறுகிறார்கள் எனில் இப்போது விற்கும் விலைவாசியில், போக்குவரத்து செலவில், குழந்தைகள் படிப்பு உள்ளிட்ட இதர செலவுகள் இருக்கையில் தங்களால் சேமிக்க முடியவில்லை என்கின்றனர்.

எனவே வரிவலையை பரவலாக்க விலக்குகளைக் குறைக்கும் திட்டம் ஒரு போதும் என்னிடம் இல்லை. அது எனது அணுகுமுறையும் இல்லை. ஆனால் வரிவிலக்கு உச்சவரம்பை அதிகப்படுத்தவே விரும்புகிறேன், ஆனால் அதற்கு அரசின் கையில் அதிக பணம் இருக்க வேண்டும். அப்படியிருந்தால் நான் விலக்கை இன்னும் விஸ்தாரப்படுத்துவேன். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் வருவாய் நிலை சவாலாக உள்ளது. கடந்த முறை நிறைய சலுகைகளை அளித்தேன், ஆனால் அதுவே எனது கட்டுப்பாட்டிற்கு அதிகமானது.

வரி ஏய்ப்பு செய்பவர்களை வரிவலைக்குள் கொண்டு வருவது மிக முக்கியம். இந்த நடுத்தர, பலவீனப் பிரிவினரை மேலும் வரிச்சுமையில் ஆழ்த்துவது என்னுடைய இப்போதைய கொள்கையாக இல்லை. மாறாக, அவர்களிடத்தில் அதிகப்படியான பணத்தை வைத்திருக்கச் செய்வதன் மூலம், அவர்களை செலவு செய்ய வழிவகை செய்கிறேன், அதே வேளையில் நான் நிறைய மறைமுக வரி வருவாயையும் ஈட்ட முடியும். இதனால் பொருளாதார நடவடிக்கைகளை அதிகப்படுத்த ஊக்குவிக்கச் செய்வேன்.” என்றார்.

நாட்டினுள் பதுக்கப்படும் கருப்புப் பணம்:

நாட்டினுள் பதுக்கப்படும் கருப்புப் பணம் அளவில் மிகப்பெரியது ஆனால் சுலபத்தில் கண்டுபிடித்து விடக்கூடியது. ஏனெனில் ஒருவர் ரியல் எஸ்டேட் செல்கிறார், நிலம் வாங்கச் செல்கிறார், சுரங்கத் தொழிலுக்குச் செல்கிறார், நகைக்கடைக்குச் செல்கிறார், ஆடம்பரப் பொருட்களுக்குச் செல்கிறார். இந்த இடங்களில் நாம் அதிகமாக கருப்புப் பண புழக்கத்தைக் கண்டுபிடிக்க முடியும். கல்வி நிறுவனங்களுக்குச் செல்லுங்கள் அங்கும் கருப்புப் பணத்தை கண்டுபிடிக்க முடியும். எனவே வாங்குவோர், விற்போரை தடம் காணுவது எப்போதும் எளிதானது” என்றார் அருண் ஜேட்லி.