கட்டண விபரங்களை வெளியிட தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு


சென்னை: தனியார் மருத்துவக் கல்லூரிகள், MBBS படிப்பிற்கு, தாங்கள் வசூலிக்கும் கட்டண விபரங்கள் மற்றும் சேர்த்துள்ள மாணவர்களின் ரேங்க் விபரங்களை, பொதுமக்களுக்கு வெளியிட வேண்டுமென, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு கூறியுள்ளது.

ஒரு மாணவர், தான் சேரும்போது, கட்டணம் உள்பட, மொத்தம் எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்பதை, தனியார் மருத்துவக் கல்லூரிகள், தங்களின் prospectus -ல் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று இதுதொடர்பாக தாக்கலான ஒரு பொதுநல மனு மீதான விசாரணையில், தலைமை நீதிபதி அடங்கிய டிவிசன் பெஞ்ச் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் மேலும் கூறியதாவது: MBBS சேர்க்கை பெறும் மாணவர்கள், தங்களின் சேர்க்கையை, ஒரு கல்லூரியிலிருந்து மற்றொரு கல்லூரிக்கு மாற்றிக்கொள்ள போதிய அவகாசம் அளிக்கும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும், MBBS சேர்க்கை, செப்டம்பர் 20ம் தேதி தொடங்கி, அதே மாதம் 27ம் தேதி நிறைவடைய வேண்டும். இதன்மூலம், சேர்க்கை மாற்றம் செய்ய, ஒரு மாணவருக்கு, 1 வாரம் அவகாசம் கிடைக்கிறது.
ரேங்க் லிஸ்ட், செப்டம்பர் 20ம் தேதி காலை 11 மணிமுதல், 27ம் தேதி மாலை 5 மணிவரை அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவும், அறிவிப்பு பலகை மூலமாகவும் வெளியிடப்பட வேண்டும். இந்த நடைமுறை அடுத்தாண்டு முதல் அமலுக்கு கொண்டுவரப்பட வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.
விஜயகுமார் என்பவர் தாக்கல் செய்த பெதுநல மனுவில், "தனியான புதிய prospectus இல்லாமல், தனியார் மருத்துவக் கல்லூரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டின் அடிப்படையில் MBBS படிப்பில், மாணவர்கள் சேர்வதை தடுக்கும் வகையில், இந்திய மருத்துவக் கவுனசில் மற்றும் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், அந்த prospectus -ல், அனைத்து தேவையான தகவல்களும் இருப்பதோடு, மெரிட் மற்றும் வெளிப்படைத் தன்மையின் அடிப்படையிலேயே MBBS சேர்க்கை நடக்கிறது மற்றும் மாணவர் சேர்க்கையில், மையப்படுத்தப்பட்ட நடைமுறையே கட்டாயம் பின்பற்றப்படுகிறது என்று உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.