பள்ளிகளில் கொண்டாட மட்டுமா 'குழந்தைகள் தினம்'?

நவம்பர் 14- குழந்தைகள் தினம். சென்னை நகரில் பள்ளிகளில் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.
ஆனால், பள்ளிப் படிப்பை பாதியில் துறந்த ராதா (12) எம்.ஆர்.டி.எஸ். மேம்பாலத்தின் கீழ் வாழ்வதற்காக கயிறு மேல் நடந்து கொண்டிருக்கிறாள்"
இலவச, கட்டாய கல்வி உரிமைச் சட்டம்-2009 இருந்தென்ன பயன்? 6 முதல் 14 வயது குழந்தைகள் கல்வியை இலவசமாக பெறவே இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது. இதுதவிர குழந்தைத் தொழிலாளர்கள் தடுப்புச் சட்டமும் இருக்கின்றன. ஆனாலும், கல்வி இடை நிற்றல், குழந்தைத் தொழிலாளர்கள் பிரச்சினை இருந்துகொண்டே தான் இருக்கின்றன.
"திண்டுக்கல்லில் இருந்து 3 மாதங்களுக்கு முன்னர்தான் சென்னை வந்தோம். நாங்கள் 5 பேர். எனக்கு 2 தம்பிகள் இருக்கின்றனர். அவர்கள் இருவரும் சென்னை மாநகராட்சிப் பள்ளியில் படிக்கின்றனர். அப்பா, அம்மா அருகில் இருக்கும் சந்தையில் பாசிமணி விற்கிறார்கள். இங்கும் பிழைக்க வழி அமையவில்லை என்றால், மீண்டும் ஊருக்கே சென்றுவிடுவோம். ஆனால், ஊருக்குப் போனால் நான் திரும்பவும் படிக்க முடியும்" என கூறுகிறார் ராதா. எம்.ஆர்.டி.எஸ். மேம்பாலத்தின் கீழ் வித்தை காட்டிவிட்டு இடைவெளியில் ராதா கூறியது இது.
அது சென்னை அரும்பாக்கத்தில் இருக்கும் ஒரு உணவகம். அருகில் இருக்கும் சின்ன அறையில் ஒரு சிறுவன மாவு பிசைந்து அதை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொண்டிருந்தான். அவனை நெருங்கும் முன்னரே அவசரமாக ஓடிவந்த கடைக்காரார், 'பையன் பார்க்கத்தான் பொடியன், வயசு 20-ஆகுதுங்க. அவனுக்கு இது ஊரு இல்லை. லீவுக்கு வந்திருக்கான். ரெண்டு நாள்ல போயிடுவான்' என்றார்.

சென்னை எம்.எம்.டி.ஏ. காலனியில் இருக்கும் மொபைல் கடையில் வாடிக்கையாளர்களிடம் உரையாடிக் கொண்டிருந்தான் சதீஸ். 7-ம் வகுப்பு வரை படித்த அவன் குடும்பச் சூழல் காரணமாக வேலைக்கு வந்துவிட்டான். ஆனால், கடைக்காரரோ சதீஸ் சிறுவன் அல்ல, அவன் சொந்த ஊருக்கு இரண்டு நாளில் சென்றுவிடுவான் என்றார்.
அரும்பாக்கத்தில் உள்ள மெகானிக் கடையில் வேலை பார்க்கும் 16 வயது மதிக்கத்தக்க ஹரி ஓட்டலில் வேலை பார்த்ததாகவும், மெகானிக் வேலைகளை படித்துக் கொள்வதற்காக அவரது தந்தையே இங்கு விட்டுச் சென்றதாகவும் கடைக்காரர் சொன்னார். ஹரியிடம் பள்ளி செல்ல விருப்பமில்லையா என கேட்டபோது, "ஏன் கூட பொறந்தவங்க ஸ்கூலுக்கு போறாங்க. எனக்கு படிப்பு வரல, இங்கு வந்துட்டேன்" என்றார். ஹரியின் தந்தை காவலாளியாக பணி புரிகிறார்.
தமிழக படைகள் ஒருங்கிணைப்பாளர் கே.சண்முகவேலாயுதம் கூறுகையில், குழந்தைகள் மீண்டும் தொழிலாளர்களாக செல்லாமல் இருக்க அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தித் தந்தால் மட்டும் போதாது. அவர்களது வாழ்வாதாரத்திற்கும் ஏதாவது உதவி செய்ய வேண்டும். இதற்கு கட்டாய கல்வி உரிமைச் சட்டம் மட்டுமே ஒரு தீர்வாக இருந்துவிட முடியாது. பள்ளிகளிலும், மாணவர்கள் யாராவது இடையில் நின்றுவிடுகிறார்களா என்பதை கவனிக்க வேண்டும்.
ஒருபுறம், 14 வயதுக்குக் கீழ் அனைத்து விதமான குழந்தைத் தொழிலுக்கும் தடை விதிக்கும் வகையில் திருத்தம் செய்யபப்ட்டுள்ள குழந்தைத் தொழிலாளர் ( ஒழிப்பு, முறைப்படுத்துதல்) சட்ட மசோதா இன்னும் கிடப்பில் இருக்கிறது.
மற்றொரு புறம், 18 வயதுக் கீழ் இருக்கும் பிள்ளைகளை குழந்தைகளாக கணக்கில் கொள்ள வேண்டும் குழந்தைநல ஆர்வலர்கள் முன்வைக்கும் வாதம் ஒரு முக்கிய கோரிக்கையாக இருக்கிறது.
குழந்தைத் தொழிலாளர்கள் அங்கும், இங்கும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. இந்த வேளையில் 'குழந்தைகள் தினம்' பள்ளிகளில் கொண்டாடப்படுவதற்கு மட்டுமா? என்பதை நாம் யோசிக்க வேண்டும்.
(இந்தக் கட்டுரையில் வரும் குழந்தைகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)
தமிழில்: பாரதி ஆனந்த்