முப்பருவ கல்வி முறை மாணவர்கள் பகீரத பிரயத்தனம்! தேர்வுக்கு தயார்படுத்த பள்ளிகள் தீவிரம்


கோவை : தமிழகத்தில், கடந்த கல்வியாண்டு வரை, முப்பருவ பாடத்திட்டத்தின் படி பயின்ற மாணவர்கள், முதல் முறையாக, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை இக்கல்வியாண்டில் எதிர்கொள்கின்றனர். ஒட்டு மொத்த பாடங்களையும், ஒரே சமயத்தில் எழுதுவதால், தேர்ச்சி விகிதம் குறைய வாய்ப்புகள் உள்ளதாகவும், மாணவர்களை தயார்படுத்துவதில், மிகுந்த சிரமம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

கடந்த, 2012--13 கல்வியாண்டில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு முப்பருவக் கல்விமுறையும், முழுமையான தொடர் மதிப்பீட்டு முறையும், அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், 2013- - 14-ல், ஒன்பதாம் வகுப்புக்கும் விரிவுப்படுத்தப்பட்டது. முப்பருவ கல்விமுறையின்படி, நான்கு மாதங்களுக்கு ஒரு பருவம் என்ற அடிப்படையில் முதல் பருவம், இரண்டாம் பருவம், மூன்றாம் பருவம் என, புத்தகங்களை மூன்றாக பிரித்து, பாடம் நடத்தி தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பருவத்தேர்வும் முடிந்த பின், அவர்கள் படித்த பாடப்புத்தகம், அதன்பின், தேவைப்படுவது இல்லை. அந்த பாடங்களை மாணவ, மாணவியர் மறந்து விடுகின்றனர். அடுத்த பருவத்துக்கான பாடங்களில் மட்டுமே, கவனம் செலுத்துகின்றனர்.

இந்நிலையில், பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு எழுத வேண்டும். ஆண்டு முழுவதும், படித்த பாடங்களை மொத்தமாக தேர்வெழுதவேண்டும். இதனால், முழு பாடங்களை படிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. முப்பருவமுறையில், 60 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதியவர்கள், தற்போது 100 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதுவதிலும் சிரமம் ஏற்படும். மேலும், பாடங்கள் அனைத்தும் அவசர கதியில் டிசம்பர் மாதத்துக்கு முன்பே, நடத்தி முடிக்கப்படுகிறது.

அரசு பள்ளி ஆசிரியர் பகத்சிங் கூறுகையில்,''ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ முறை மற்றும், 'ஆல்-பாஸ்' திட்டத்தில், படித்து வரும் மாணவர்களை பொதுத்தேர்வுக்கு, குறைந்த நேரத்தில் தயார்படுத்துவதில் அதிக சிரமம் ஏற்பட்டுள்ளது. முப்பருவ முறையில் பகுதி, பகுதியாக படித்த மாணவர்கள், முழு பாடங்களையும் மனதில் நிறுத்துவது சிரமம். ஆசிரியர்களின் நிலை, மாணவர்களின் நலம் உணர்ந்து ஒன்பதாம் வகுப்பு முறையை பத்தாம் வகுப்பிலும் பின்பற்றும்படி, பாடத்திட்டங்களை ஏற்படுத்தவேண்டும். அல்லது பத்தாம் வகுப்பு தேர்வு முறையை, ஒன்பதாம் வகுப்பில் இருந்தே பின்பற்றலாம்,'' என்றார்.

'மதிப்பெண் ஆய்வுக்கு திட்டம்'
கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில், ''பத்தாம் வகுப்பு வரும் மாணவர்கள் வயதுக்கேற்ப, அதிக பாடங்களை படிக்க தகுதி பெறுவதாக கருதுகிறேன். இருப்பினும், அரையாண்டு தேர்வு முடிவுகளை, கடந்த கல்வியாண்டில் நடந்த அரையாண்டு தேர்வுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.

இடைநிற்றல் அதிகரிக்க வாய்ப்பு
மாணவர்கள், ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறையில் எளிமையாக படித்து, 'ஆல்-பாஸ்' திட்டத்தின்படி, அடுத்த வகுப்புகளுக்கு தேர்ச்சி பெற்றுவிடுகின்றனர். பத்தாம் வகுப்பில், அனைத்து பாடங்களையும் ஒட்டு மொத்தமாக படிக்க, சராசரிக்கும் சற்று குறைவாக உள்ள மாணவர்களால் இயலாமல், பள்ளிக்கு வருவதை தவிர்க்கின்றனர். இதனால், கல்விக்கு முழுக்கு போடும் சூழல் மறைமுகமாக நடந்து வருகிறது. இதை, அதிகாரிகள் கவனத்தில் கொண்டு, பத்தாம் வகுப்பில், இடைநிற்றல் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.