அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தை பள்ளி நிர்வாகத்திடம்தான் வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஊதியத்தை பள்ளி நிர்வாகத்திடம்தான் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

போராட்டம் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சர்.சி.எம்.டி.முத்தையா செட்டியார் பள்ளி நிர்வாகம், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘எங்கள் பள்ளிக்கு அரசு நிதி உதவியுடன் செயல்படுகிறது. இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான ஊதியம் அரசிடமிருந்து நேரடியாகவே அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அவ்வாறு வழங்காமல், பள்ளி நிர்வாகத்திடமே ஊதியத்தை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–
இந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆகியோருக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் சுமூகமான உறவு இல்லை. இதனால், நிர்வாகத்துக்கு எதிராக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட முற்பட்டுள்ளனர். இதையடுத்து மாவட்ட கல்வி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கடந்த 2012–ம் ஆண்டு முதல் ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆகியோருக்கு நேரடியாக சம்பளத்தை வழங்கி வருகின்றனர்.
அதிகாரியின் தவறு தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான ஊதியம் சம்பந்தப்பட்ட பள்ளிச் செயலாளரிடமே வழங்க வேண்டும். இதற்கு முழு அதிகாரம் படைத்தவர் மாவட்டக் கல்வி அதிகாரிதான்.
இதை நடைமுறைப்படுத்தாதது அவர் செய்த தவறாகும். தாங்கள் நினைப்பதைத்தான் நிர்வாகம் செய்ய வேண்டும் என ஆசிரியர்களும், ஊழியர்களும் நினைக்கக் கூடாது. கல்வி அதிகாரிகளும் அதை அனுமதிக்கக் கூடாது. எனவே, மனுதாரர் பள்ளியின் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான ஊதியத்தை பள்ளி நிர்வாகத்திடமே வழங்க வேண்டும். அந்த சம்பளத்தை ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு பிரித்துக் கொடுக்கும்போது, பள்ளி நிர்வாகம் நேர்மையுடன் நடந்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.