
உங்கள் பிழைகளுக்கு மாணவர்களை ஏன் தண்டிக்கிறீர்கள் என கேந்திரிய வித்யாலயா
பள்ளிகளில் ஜெர்மன் மொழிப்பாடத்தை உடனடியாக ரத்து
செய்து விட்டு அதற்குப்
பதிலாக சமஸ்கிருதப் பாடத்தைக் கற்றுத்தரும் மத்திய அரசின் முடிவுக்கு உச்ச
நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் இடைநிலை வகுப்புகளில் மும்மொழிக் கொள்கை
கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி முதல்மொழியாக ஆங்கிலமும், இரண்டாவதாக
பிராந்திய மொழியும், மூன்றாவதாக சமஸ்கிருதம் அல்லது ஏதேனும் ஒரு நவீன
இந்திய மொழியும் கற்றுத்தரப்பட்டு வந்தன.
வெளிநாட்டு வேலைவாய்ப்பைக் கருத்தில் கொண்டு ஏதேனும் ஒரு வெளிநாட்டு மொழியை
கற்பிக்க முந்தைய மத்திய அரசு முடிவெடுத்தது. இதையடுத்து 2011-12 ஆம்
கல்வியாண்டிலிருந்து மூன்றாவது மொழியாக சமஸ்கிருதத்திற்குப் பதிலாக
வெளிநாட்டு மொழி அறிமுகம் செய்யப்பட்டது.
கடந்த செப்டம்பர் மாதம் இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாத நிலையில், கடந்த
27.10.2014 அன்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி
தலைமையில் நடைபெற்ற கேந்திரிய வித்யாலயா சங்கதன் ஆளுனர்கள் வாரியத்தின்
99-வது கூட்டத்தில் ஜெர்மன் உள்ளிட்ட அன்னிய மொழிப் பாடங்களை ரத்து
செய்துவிட்டு அவற்றுக்குப் பதிலாக முன்பிருந்தவாறு சமஸ்கிருதம் அல்லது
ஏதேனும் ஒரு நவீன இந்திய மொழியை கற்றுத்தர வேண்டும் என
தீர்மானிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் சமஸ்கிருதப் பாடத்தை
அறிமுகம் செய்யவும் கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது. இம்முடிவுகளை
உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அமைச்சர் ஸ்மிரிதி இராணி
ஆணையிட்டார்.
இந்நிலையில் மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து மாணவர்களின் பெற்றோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், "நடப்புக் கல்வி ஆண்டில்,
கேந்திரிய வித்யாலா பள்ளிகளில் ஜெர்மன் மொழி கற்பித்தலை தொடர்வதை மத்திய
அரசு பரிசீலிக்க வேண்டும்" என்றது.
இதற்கு பதிலளித்த அட்டர்னி ஜெனரல், "ஜெர்மன் அரசு ஆதரவுடன் இயங்கும்
மேக்ஸ்முல்லர் பவன் நிர்வாகத்துடன் கேந்திரிய வித்யாலயா ஒப்பந்தம்
செய்துகொண்டது சட்டப்படி செல்லாது. எனவே அவ்வாறு தொடர முடியாது" என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "உங்கள் தவறுகளுக்கு மாணவர்களை ஏன் தண்டிக்கிறீர்கள்" என கடிந்து கொண்டனர்.
மேலும், கேந்திரிய வித்யாலா பள்ளிகளில் சமஸ்கிருத பாடத்தை
அறிமுகப்படுத்துவதை அடுத்த கல்வி ஆண்டுக்கு ஒத்திவைப்பதில் தனது
நிலைப்பாட்டை 4 வாரங்களுக்குள் தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு
உத்தரவிட்டனர்.
அண்மையில், ஆசியான் உச்சி மாநாட்டின்போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த
ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்கல், "கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில்
ஜெர்மன் மொழி கற்பித்தலை தொடர்வதை இந்தியா பரிசீலிக்க வேண்டும்" என
கேட்டுக்கொண்டார் என்பது கவனிக்கத்தக்கது.