அதிகரிக்கும் ஆங்கில மோகத்தால் அரசு தொடக்கப்பள்ளிகளில் குறைந்துவரும் மாணவர்கள்

     அதிகரித்து வரும் ஆங்கில மோகத்தால் அரசு தொடக்கப் பள்ளிகளில் போதிய அளவில் மாணவர் சேர்க்கை இல்லாமல் குறைந்து வருகிறது. இதற்கு அடிப்படை காரணம் மக்களிடையே வளர்ந்து வரும் ஆங்கில மோகம் தான். 
 
          அரசு பள்ளிகளில் உள்ளது  போல் பரந்துவிரிந்த  விளையாட்டு மைதானம், பெரிய விசாலமான வகுப்பறைகள், நல்ல காற்றோட்டமான சூழ்நிலை பெரும்பாலான தனியார் பள்ளிகளில் இல்லை. இருப்பினும் தற்போது உள்ள நிலையில் சாதாரண வேலை பார்ப்பவர்கள் கூட தனியார் மெட்ரிக் பள்ளிகளையே நாடி வருகின்றனர்.  

           அதே நேரம் இந்த பள்ளிகளில் பணியுரியும் ஆசிரியர்களில் 80 சதவீதம் பேர் தங்கள் குழந்தைகளை மெட்ரிக் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கின்றனர். பெரும்பாலன அரசு தொடக்கப் பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். ஒருசில பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாத நிலையும் உள்ளன. இரண்டு ஆசிரியர்களை வைத்து 1 முதல் 5ம் வகுப்புவரை உள்ள மாணவர்களுக்கு எவ்வாறு பாடம் நடத்துவார்கள் என பெற்றோர்கள் எண்ணுவதும் இத்தைகைய நிலைக்கு காரணமாக உள்ளது. ஒரு சில பள்ளிகளில் ஆசிரியர்கள் அதிகமாக இருந்தும் மாணவர்கள் இல்லாத நிலை உள்ளது.  மாணவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது. இதேநிலை நீடித்தால் இன்னும் 10 ஆண்டுகளில் அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இல்லாமல் போகும் நிலை ஏற்படும் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்த கல்வியாளர்கள் சிலர் கூறுகையில். கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்வழி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை என்பது குறைந்து கொண்டேவருகிறது. தற்போது நடைமுறையில் உள்ள செயல்வழிகற்றல் முறையால் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து உள்ளது. அதேபோல் ஒரு கி.மீக்கு இடையே மற்றொரு பள்ளி இருக்க கூடாது என அரசு ஆணை உள்ளது. இந்த விதி மீறப்பட்டு அரசு பள்ளிகளுக்கு அருகிலேயே தனியார் ஆங்கிபள்ளிகள் புற்றீசல் போல பெருகிவருகிறது. மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழ்வழியில் கற்கும் ஆர்வத்தை மாணவர்கள், பெற்றோர்களிடம் உருவாக்க வேண்டும். அரசு பள்ளிகளில் பணியுரியும் அனைத்து ஆசிரியர்களும் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் தான் சேர்க்க  வேண்டும் என உத்தரவு இடவேண்டும். மாணவர்களுக்கு  சிறப்பு ஆங்கிலபயிற்சி அளிக்க வேண்டும். தமிழ்வழியில் படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு உதவித் தொகை வழங்க வேண்டும் என்றனர்.