கல்வித்துறை சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவின் தலைவிதியை மாற்றியமைக்க வேண்டும்: ஸ்மிருதி இரானி

உயர் கல்வித்துறையில் உள்ள ஒழுங்குமுறை அமைப்புகளை மறு ஆய்வு செய்து வருவதாக மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:

      உயர் கல்வித் துறையில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) போன்ற ஒழுங்குமுறை அமைப்புகளை மறு ஆய்வு செய்து வருகிறோம்.
 
        கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டில் மாற்றம் கொண்டுவரவும், நாட்டில் கல்விக்கான செயல்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் இந்த மறு ஆய்வு அவசியமாகும். கல்வித்துறை சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவின் தலைவிதியை மாற்றியமைக்க வேண்டும் என்றார் ஸ்மிருதி இரானி.
இதனிடையே, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் ராம்சங்கர் கட்டேரியா, உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எங்கள் துறையில் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பின்பற்றிய கொள்கைள் மறுபரிசீலனை செய்யப்படும். தேவைப்பட்டால் அவற்றில் மாற்றம் செய்யப்படும்'' என்று தெரிவித்தார்.