மத்திய பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை அதிரடி உத்தரவு


நாமக்கல்: தமிழக அரசின் கட்டுக்குள், மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளிகள், வரும் கல்வியாண்டு முதல் தமிழை கட்டாய பாடமாக நடத்த வேண்டும் என்ற உத்தரவை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட
தனியார் பள்ளிகள், அவர்களின் அங்கீகாரம் தொடர்பான விவரங்களை, வரும் 30க்குள் கல்வித்துறை அதிகாரிகளிடம் சமர்பிக்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாநில கல்வித் திட்ட, தமிழ்வழி பாடத்திட்டத்தில், அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகள் செயல்படுகிறது. மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தில், தமிழ் அல்லாத மற்ற விருப்பமொழி பாடத்திட்டத்தில், 565 தனியார் சி.பி.எஸ்.ஐ., ஐ.சி.எஸ்.இ. பள்ளி, மத்திய அரசின் 41 கேந்திர வித்யாலயா, இரண்டு நவோதயா, ஒரு சைனிக் பள்ளிகள் செயல்படுகிறது.
கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதி பள்ளிக்கல்வி இயக்குனரகம், தமிழக அரசின் கட்டுக்குள், மத்திய வாரிய பள்ளிகளை கொண்டு வர, ஓர் புதிய உத்தரவை பிறப்பித்தது. அதில், தமிழக அரசின் தமிழ் கற்றல் சட்டத்தின்படி, தனியார் நர்சரி, பிரைமரி, மேல்நிலைப்பள்ளி, தமிழை கட்டாய பாடமாக கற்பிக்க வேண்டும்.
குறிப்பாக, கேந்திர வித்யாலயா, நவோதயா, சைனிக் பள்ளிகள் தவிர, மற்ற பள்ளிகள் அனைத்தும், வரும், கல்வியாண்டு வாரியாக, அதாவது, 2015--16ல், 1ம் வகுப்பு, 2016--17ல், 1, 2ம் வகுப்பு, 2017--18ல், 1, 2, 3ம் வகுப்பு, 2018--19ல், 1, 2, 3, 4ம் வகுப்பு, 2019--20ல், 1 முதல், 5ம் வகுப்பு என்ற வரிசையில், வரும், 2024--25ம் ஆண்டுக்குள், 1 முதல், எஸ்.எஸ்.எல்.சி., வகுப்பு வரை, அமல்படுத்த வேண்டும் என, உத்தரவிட்டது.
இதன்மூலம் மத்திய கல்விய வாரிய பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்டு வகுப்பு எடுத்த தனியார் சி.பி.எஸ்.ஐ.,- ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள், மாநில அரசின் கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. கடந்த காலங்களில், மாநில பாடத்திட்டத்தில் செயல்படும், தனியார் பள்ளிகளிடம் இருந்து, பள்ளிகளின் தரம் தொடர்பாக தொடர் அங்கீகார சான்று, ஒவ்வொரு ஆண்டும் பெறப்படும். அதன்படி, நடப்பாண்டு, வருவாய் துறையினரிடம் இருந்து கட்டிட உரிமைச் சான்று, அங்கீகரிக்கப்பட்ட கட்டட இன்ஜினியரிடம் இருந்து, கட்டிட உறுதிச் சான்று, சுகாதரத்துறையிடம் இருந்து, சுகாதாரச் சான்று, தீயணைப்பு துறையிடம் இருந்து, தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு என, நான்குவகை சான்று பெற்று, சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரியிடம், தனியார் பள்ளிகள் சமர்ப்பித்து வருகின்றன.
கடந்த காலங்களில், சி.பி.எஸ்.ஐ., - ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள், மத்திய கல்வி வாரியத்தில், சம்பந்தப்பட்ட ஆவணங்களை சமர்பித்து வந்தனர். ஆனால், தற்போதைய புதிய உத்தரவால், நீதிபதி சம்பத் கமிஷன் பரிந்துரை செய்த, 14 விதிமுறைகளை, மத்திய கல்வி வாரிய பாடத்திட்ட தனியார் பள்ளிகள், கட்டாயம் பின்பற்ற வேண்டும். இந்த விவரங்களை, வரும் 30ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என, கல்வித்துறை கட்டாய உத்தரவிட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநில அரசின் கல்வித்திட்டத்தில் செயல்பட்டு வந்த, தனியார் பள்ளிகளிடம் இருந்து மட்டுமே, கடந்த காலங்களில் தொடர் அங்கீகார சான்று பெறப்பட்டது. ஆனால், வரும் கல்வியாண்டில், மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தில் செயல்படும் தனியார் சி.பி.எஸ்.ஐ.,- ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள், தமிழை கட்டாய பாடமாக, துவக்கப் பள்ளியில் இருந்து துவங்க வேண்டும்.
அதன் தொடர்ச்சியாக, மேற்கண்ட தனியார் பள்ளிகளை, மாநில அரசின் கல்வித்துறை கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக, பள்ளிகளுக்குள் நடக்கும் விதிமீறல், மாணவர் தொடர்பான பிரச்னை ஆகியவற்றை, மாநில அரசு கையாள வேண்டியுள்ளதால், அவர்களின் அங்கீகார விவரங்களை பரிசோதிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.