அலுவலகங்களில் ஜெ. புகைப்படங்களை அகற்றக் கோரும் வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை அகற்றக் கோரிய வழக்கில், 4 வாரங்களுக்குள் முடிவெடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டிருப்பதாகவும், சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படத்தை அரசு அலுவலகங்களிலோ, அரசு நலத்திட்டங்களிலோ இருக்கக்கூடாது, அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.
மன்னார்குடி சட்டப் பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா சார்பில் திமுக தலைமைக் கழக வழக்கறிஞர் இ.பரந்தாமன் மற்றும் கழக வழக்கறிஞர் ஆர்.நீலகண்டன் ஆகியோர் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், "அரசு அலுவலகங்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை வைத்துள்ளது தொடர்பாக 4 வாரங்களுக்குள் முடிவெடுக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிடுகிறது" என தெரிவித்தனர்.
மேலும், மனுவை அரசு அதிகாரிகள் பரிசீலிக்கும்போது 8-11-2014 அன்று சட்டப் பேரவைச் செயலாளர் வெளியிட்டுள்ள அரசு ஆணையையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.