ஆசிரியர் தேர்வு விண்ணப்பத்தில் குழப்பம்

விண்ணப்பத்தில் ஆண்டை குறிக்கும் இடத்தில் இருகட்டங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதியானோர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இதற்கான விண்ணப்ப படிவங்கள் தற்போது விநியோகிக் கப்பட்டு வருகின்றன. விண்ணப்பம் பூர்த்தி செய்து அளிக்க வரும் 26-ம் தேதி கடைசி நாள்.
விண்ணப்பத்துடன் படிவத்தை நிரப்ப உதவும் வழிமுறை கையேடு ஒன்றும் கொடுக்கப்படுகிறது. அதில் வேலைவாய்ப்பக பதிவு மூப்பு என்ற இடத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த ஆண்டு மற்றும் மாதம் குறிக்க வேண்டும் என, சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
விண்ணப்ப படிவத்தில் வரிசை எண் 9-ல் வேலைவாய்ப்பக பதிவு மூப்பு காலத்தில் ஆண்டுக்கான வரிசையில் இரண்டு கட்டங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன. முதல் வரிசை கட்டங்களில் 0 முதல் 4 வரை வரையிலும், இரண்டாவது வரிசை கட்டங்களில் 0 முதல் 9 வரையிலும் குறிப்பிடப் பட்டுள்ளது.
இதில் மாதத்தை பொறுத்த வரை எந்த குழப்பமும் இல்லை. ஆனால், ஆண்டை குறிப்பிடும் கட்டத்தில் குழப்பம் இருப்பதாக தேர்வர்கள் கூறுகின்றனர். ஆண்டுக்கான வரிசையில் முதல் கட்டத்தில் 4 வரை மட்டும் எண் உள்ளதால் 2000-க்கு முன்பு பதிவு செய்தவர்கள் வருடத்தைக் குறிப்பதில் குழப்பம் அடைந் துள்ளனர்.
எனவே தேர்வு வாரியம் உடனடி யாக காலம் எண் ஒன்பதிற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என, தேர்வுக்கு தயாராகும் ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.