பள்ளியிலேயே சகமாணவனால் மாணவன் குத்திக்கொலை: அருப்புக்கோட்டையில் பயங்கரம்!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் 8ஆம் வகுப்பு மாணவன் சகமாணவனால் பள்ளிக்கூடத்திலேயே கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

         அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு அயன்கரிசல்குளத்தை சேர்ந்த விவசாயி கோபால் என்பவரது மகன் பாஸ்கரன் (13) 8ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு அரசு டவுன் பஸ்சில் பந்தல்குடிக்கு வந்த பாஸ்கரன், பள்ளிக்கு சென்று தனது வகுப்பறையில் உட்கார்ந்திருந்தார்.

அப்போது அதே பள்ளியை சேர்ந்த மற்றொரு மாணவன் பாஸ்கரனிடம் வந்து தகராறு செய்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அந்த மாணவன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாஸ்கரனின் வயிறு உள்பட பல இடங்களில் கத்தியால் குத்தி விட்டு பள்ளியை விட்டு ஓடி விட்டார். பலத்த காயமடைந்த பாஸ்கரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்த பந்தல்குடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்த மாணவன் பாஸ்கரன் உடலை பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கத்தியால் குத்திய அந்த மாணவனுக்கும், பாஸ்கரனுக்கும் இடையே இருந்த முன் விரோதத்தால் அந்த கொலை சம்பவம் நடந்திருப்பதாக காவல்துறையினர் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கத்தியால் குத்திய அந்த மாணவன் யார் என்ற விபரத்தை கண்டுப்பிடிக்கும் விசாரணையில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர். பள்ளி வளாகத்தில் கொலை நடந்திருப்பதால் உடனடியாக பந்தல்குடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் திண்டுக்கல் மாவட்டத்தில், பள்ளியிலேயே மாணவர் ஒருவர் சகமாணவனால் படுகொலை செய்யப்பட்டார். தற்போது அருப்புகோட்டையிலும் பள்ளியில் மாணவர் ஒருவர் சகமாணவரால் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.