பொதுத்தேர்வு விடைத்தாள் பக்கங்கள் குறைக்க முடிவு; தேர்வுத்துறை சிக்கன நடவடிக்கை

திருப்பூர் : வரும் பொதுத்தேர்வில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பாடங்களுக்கு வழங்கப்படும் விடைத்தாளில் எட்டு முதல் 12 பக்கங்கள் வரை குறைக்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.


வரும் 2015ல் மார்ச் மற்றும் ஏப்., மாதங்களில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை அரசு தேர்வுத்துறை வழங்குகிறது. 12 முதல் 16 பக்கங்கள் கொண்ட முதன்மை விடைத்தாள் தரப்படும்; அப்பக்கங்களில் எழுதி முடித்து விட்டு, மாணவர் கேட்கும்போது கூடுதல் விடைத்தாள் வழங்குவது வழக்கமாக இருந்தது. இதனால், மாணவரின் நேரம் வீணாவதோடு, பக்கங்களை சரியாக அடுக்கி கட்டித் தருவதிலும் சிரமம் ஏற்பட்டது. கூடுதல் விடைத்தாளை கணக்கிடுவதில் தேர்வறை கண்காணிப்பாளருக்கு பணிச்சுமை ஏற்பட்டது. சில மாணவர்கள் கூடுதல் விடைத்தாள்களை மாற்றி, தேர்வறையில் முறைகேட்டிலும் ஈடுபட்டனர்.

இப்பிரச்னைகளுக்கு தீர்வாக, அதிக பக்கங்களுடன் விடைத்தாள் தரும் முறையை தேர்வுத்துறை கடந்தாண்டு கொண்டு வந்தது. அதன்படி, தேர்வுக்கேற்ப 32 முதல் 54 பக்கங்கள் வரை கொண்ட விடைத்தாள் வழங்கப்பட்டது. இதனால், கூடுதல் விடைத்தாள் தேவைப்படாததால், மாணவரின் நேரம் மிச்சப்படுத்தப்பட்டது. விடைத்தாள் மாற்றிக்கொள்வது போன்ற தவறும் களையப்பட்டது. தேர்வு எழுதி முடித்தபின், விடைத்தாளில் எழுதாத பக்கங்களில் குறுக்கு கோடு இட, மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, கடந்தாண்டு பொதுத்தேர்வில் எழுதாமல் வீணாக்கப்பட்ட தாள்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தது, தேர்வுத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்தது. இதனால், பல லட்சம் ரூபாய் விரயமானதை அறிந்து, தேர்வுத்துறை அதிர்ச்சியடைந்தது.

வரும் பொதுத்தேர்வில், அத்தகைய நஷ்டம் தொடராமல் தடுக்கும் வகையில், சிக்கன நடவடிக்கையாக விடைத்தாளில் எட்டு முதல் 12 பக்கங்கள் வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வில், தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கு 40க்கு பதிலாக 32 பக்கங்கள்; விலங்கியல் மற்றும் தாவரவியல் பாடங்களுக்கு 52ல் இருந்து 44 பக்கங்கள்; கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்துக்கு 40ல் இருந்து 32 பக்கங்கள்; கணக்கு பதிவியல் பாடத்துக்கு 54ல் இருந்து 46 பக்கங்கள், மற்ற பாடங்களுக்கு 40 பக்கங்கள் என விடைத்தாள் பக்கங்கள் குறைக்கப்படுகின்றன.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விலும் மொழி பாடங்களுக்கு 32ல் இருந்து 24 பக்கங்களாக குறைக்கப்படுகிறது; தமிழ் இரண்டாம் தாள் விடைத்தாளில், ரயில்வே முன்பதிவு, முன்பதிவு ரத்து, வங்கியில் பணம் செலுத்துதல் மற்றும் பணம் பெறுதல் போன்றவற்றை இணைப்பு தாள்களாக வழங்காமல், விடைத்தாளிலேயே நான்கு பக்கங்களில் அவற்றை அச்சிட்டு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சமூக அறிவியல் பாட விடைத்தாளிலும் இந்திய வரைபடங்கள், ஆசியா, ஐரோப்பா வரைபடங்களையும் சேர்த்து அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கணிதம், அறிவியல் பாடங்களுக்கு 30 பக்கங்கள் ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை, அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை மூலம், தேர்வுத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

திருப்பூர் கே.எஸ்.சி., அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சதாசிவத்திடம் கேட்ட போது, ""அதிக பக்கங்களில், விடைத்தாள் தருவதால், சில பக்கங்கள் வீணாவதை தடுக்க, தேர்வுத்துறை இந்நடவடிக்கை எடுத்துள்ளது. தேவைப்படுவோருக்கு கூடுதல் பக்கம் வழங்க வாய்ப்புள்ளதால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை,'' என்றார்.