விண்கலத்தை கொண்டு செல்லும் ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்: 'இஸ்ரோ' நிறுவனத்தின் அடுத்த அதிரடி

சென்னை: ''இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் மைல் கல்லாகக் கருதப்படும், ஜி.எஸ்.எல்.வி., மார்க் - 3 ராக்கெட், டிச., 20ம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது,'' என, சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர், பிரசாத் தெரிவித்துள்ளார்.

மாதிரி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான, 'இஸ்ரோ' மனிதனை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக, 'கேர்' என்ற பெயர் கொண்ட மாதிரி விண்கலத்தை உருவாக்கியுள்ளது. இந்த விண்கலத்தை, ஜி.எஸ்.எல்.வி., மார்க் - 3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த, இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.

இதுகுறித்து, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இயக்குனர், பிரசாத் கூறியதாவது: இந்திய தொழில்நுட்பத்தில் உருவான, அதிக எடை சுமந்து செல்லும் திறன் கொண்ட, ஜி.எஸ்.எல்.வி., மார்க் - 3 ராக்கெட்டை சோதனை முறையில் விண்ணில் ஏவ, இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், 'கேர்' மாதிரி விண்கலம், விண்ணில் செலுத்தப்படும். ஜி.எஸ்.எல்.வி., மார்க் - 3 ராக்கெட், டிசம்பர், 20ம் தேதிக்குள் விண்ணில் ஏவப்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


ஜி.எஸ்.எல்.வி., மார்க் - 3 ராக்கெட்:

ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட், நான்கு டன் எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தவல்லது. இதன் மொத்த எடை, 630 டன்; 42.5 மீட்டர் உயரமுள்ளது. நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்ட, அடுத்த தலைமுறை ராக்கெட்.


'கேர்' மாதிரி விண்கலம்:

இந்த மாதிரி விண்கலம், 3,735 கிலோ எடையுள்ளது. உயரம், 2.7 மீட்டர்; அகலம், 3.1 மீட்டர். மூன்று பேர் அமர்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலம், மீண்டும் பூமிக்கே திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த விண்கலம் பூமிக்கு திரும்பும் போது, அதன் வேகத்தை கட்டுப்படுத்த, மூன்று நிலைகள் கொண்ட, 'பாராசூட்'கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், வெப்பத்தை கட்டுப்படுத்தும் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விண்கலம், அந்தமானுக்கு அருகே, 600 கி.மீ., தொலைவில் கடலில் விழும் வகையில் இயக்கப்படும். ஜி.எஸ்.எல்.வி., மார்க் - 3 ராக்கெட் விண்ணில் செலுத்துவதில் இருந்து, விண்கலம் பூமிக்கு திரும்புவது வரை அனைத்து நடவடிக்கைகளும், 25 நிமிடத்திற்குள் நடந்து முடியும். கடலில் விழும் விண்கலத்தை, கடலோர காவல் படை படகைக் கொண்டு கண்காணிக்கவும், ஹெலிகாப்டர் கொண்டு மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.