தமிழ்நாடு தனியார் சட்டக் கல்லூரிகள் தடைச் சட்டத்தை எதிர்த்து வழக்கு

தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்குவதற்குத் தடை விதித்து இயற்றப்பட்ட தமிழ்நாடு தனியார் சட்டக் கல்லூரிகள் நிறுவனத் தடைச் சட்டம் 2014-ஐ சட்ட விரோதமானது என அறிவிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்குரைஞர்கள் சமூக நீதிப் பேரவையின் தலைவர் கே.பாலு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்: தமிழகத்தில் ஆண்டு தோறும் 3,500 மாணவர்கள் தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்குரைஞர்களாக பதிவு செய்கின்றனர்.
தற்போது, தமிழகம் முழுவதும் 65 ஆயிரம் வழக்குரைஞர்கள் பயிற்சி செய்து வருகின்றனர். ஆனால், வழக்குரைஞர்களின் இந்த எண்ணிக்கை தமிழக மக்கள் தொகையான 5 கோடி பேரின் தேவையை பூத்தி செய்யும் வகையில் இல்லை. இந்தியா முழுவதும் பல்வேறு காரணங்களால் பல கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது இந்தியா முழுவதும் 10.5 லட்சம் நீதிபதிகள் உள்ளனர். ஆனால், ஒவ்வொரு 10 லட்சம் மக்களுக்கும் கண்டிப்பாக 50 ஆயிரம் நீதிபதிகள் தேவை என இந்திய சட்ட ஆணையம் தனது 120-வது அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சட்டக் கல்லூரிகளில் போதிய இடம் இல்லாமல், ஆந்திரம், கர்நாடகம் போன்ற வேறு மாநிலங்களுக்குச் சென்று தங்களது சட்டப் படிப்பை மேற்கொள்கின்றனர்.
தமிழகத்தில் 700-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. ஆனால், சட்டக் கல்லூரிகள் 10 மட்டுமே செயல்படுகின்றன.
இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம், தமிழ்நாடு தனியார் சட்டக் கல்லூரிகள் நிறுவனத் தடைச் சட்டம் 2014-ஐ தமிழக அரசு இயற்றியது. இந்தச் சட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டம் முற்றிலும் முரண்பாடானது. தகுந்த காரணம் இல்லாமல் தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு தனியார் சட்டக் கல்லூரிகள் தடைச் சட்டம் 2014-ஐ சட்ட விரோதமானது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு ஜனவரி 19-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.