அரசுப் பள்ளியில் அற்புத சிற்பி

செஸ் விளையாட்டில் மாணவர்கள் - ஆசிரியை கந்தம்மாள்
அரசுப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணிபுரிகிறவரின் கடமை என்ன? மாணவர்களுக்கு உடற்கல்வியுடன் ஒழுக்க நெறிமுறைகளையும் போதிப்பதுதானே என்று பலரும் பட்டென்று பதில் சொல்லிவிடலாம்.
ஆனால் இவற்றுடன் தன் எல்லையைச் சுருக்கிக்கொள்ள விரும்பாமல் மாணவர்களைப் பல்துறை வித்தகர்களாக்குவதையே தன் இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறார் கந்தம்மாள். திருவள்ளூர் மாவட்டம் எண்ணூரை அடுத்த கத்திவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் இவர்.
குத்துச்சண்டை என்பது பணம் படைத்தவர்கள் மட்டுமே கற்க முடியும் என்ற நினைப்பைத் தகர்த்து, தான் பணிபுரியும் அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் குத்துச்சண்டைப் பயிற்சியை அறிமுகப்படுத்தியிருக்கிறார் கந்தம்மாள். சமீபத்தில் விருதுநகரில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச் சண்டை தகுதிப் போட்டிகளுக்குத் தன் மாணவிகளை அழைத்துச் சென்று திரும்பியிருக்கிறார். அதில் தேர்வான இரண்டு மாணவிகளில் ஒருவர் ஹைதராபாத்தில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் வெண்கலப் பதக்கம் வாங்கியிருப்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறார் கந்தம்மாள்.
இதுமட்டுமல்ல, மாணவர்களைச் சின்னச் சின்ன சமூகப் பணிகளில் ஈடுபடுத்துவது, வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் துணை நிற்பது, பிற பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நடக்கும் கலைநிகழ்ச்சிகளுக்கும் அறிவுத்திறன் போட்டிகளுக்கும் அழைத்துச் செல்வது எனப் பெரும்பாலான நேரத்தை மாணவர்களுடனேயே செலவிடுகிறார்.
மாற்றம் சாத்தியமே
கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணிபுரிந்த இவர், அரசுப் பள்ளியில் சேர்ந்த பிறகு அங்கிருந்த மாணவர்களின் நிலை, பல நிதர்சனங்களைக் காட்டியதாகச் சொல்கிறார். காலையில் சாப்பிடாமல் பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவை நம்பி வரும் மாணவர்களுக்கு விளையாட்டின் மீது இருக்கும் ஆர்வத்தைப் புரிந்துகொண்டார் கந்தம்மாள். சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்?
மாணவர்களின் விளையாட்டுத் திறமைக்கு உணவு ஒரு தடைக்கல்லாக இருக்கக் கூடாது என நினைத்தார். தலைமை ஆசிரியரின் உதவியுடன் ‘ஆகார்’ திட்டம் மூலம் ஏழை மாணவர்களுக்குக் காலை உணவு கிடைக்கச் செய்தார். இந்தத் திட்டத்தின் மூலம் இப்போது ஐம்பது குழந்தைகள் பள்ளியில் காலை உணவு சாப்பிடுகின்றனர். சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்கும் கோரிக்கை வைத்திருக்கிறாராம்.
வறுமை தடையில்லை
படிக்கும் காலத்தில் கால்பந்து விளையாட்டில் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற கந்தம்மாளுக்குச் சிறு வயது முதலே விளையாட்டில் ஆர்வம் அதிகம். விருதுநகர் பூர்வீகம் என்றாலும் வளர்ந்ததெல்லாம் சென்னையில். பழைய வண்ணாரப்பேட்டை முருகதனுஷ்கோடி பள்ளியில் படித்த கந்தம்மாள் வறுமையின் காரணமாக மதிய உணவுக்குப் பள்ளியில் வழங்கப்படும் சத்துணவையே நம்பியிருந்தார். பள்ளியில் வழங்கப்படும் சீருடையும் புத்தகங்களுமே கந்தம்மாளின் பள்ளிப் படிப்பு தொடரக் காரணமாக இருந்திருக்கின்றன.
ஆனால் இந்த நிலையிலும் உறுதிகொண்ட நெஞ்சுடன் விளையாட்டில் ஆர்வம் காட்டியிருக்கிறார். கால்பந்து, ஹாக்கி, ஹேண்ட் பால் என அனைத்திலும் தடம் பதித்தார். தடகளப் பிரிவிலும் அங்கீகாரம் பெற்றிருக்கிறார்.
திருமணத்துக்குப் பிறகும் தன் விளையாட்டு ஆர்வத்துக்குக் கந்தம்மாள் முற்றுப்புள்ளி வைக்கவில்லை. வயிற்றில் குழந்தையைச் சுமந்துகொண்டு கால்பந்து போட்டியில் பங்கேற்றிருக்கிறார்.
தான் படித்த பள்ளியில் இருந்த ஆசிரியர்களே தன் மேல்படிப்புக்குக் காரணம் என்கிறார் கந்தம்மாள். தன் மூத்த மகனுக்கு நான்கு வயதாகும்போது உடற்கல்வி படிப்பில் சேர விரும்பினார். படிப்புக் கட்டணத்துக்குக் கையில் பணமில்லை. தன் தாலி செயினை அடகு வைத்துப் படித்திருக்கிறார்.
“என் மகனை வீட்டில் விட்டுவிட்டு விடுதியில் தங்கிப் படித்தேன். அப்போது என் கணவரும் மாமியாரும் எனக்குப் பக்கபலமாக இருந்தார்கள்” என்று நெகிழும் கந்தம்மாள், நெய்வேலியில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் தமிழகக் கால்பந்து அணியின் முதல் பெண் நடுவராகப் பங்கேற்றவர்.
“வறுமையை எதிர்த்துப் போராடி ஜெயித்தவள் நான். எவ்வளவு உயர்ந்தாலும் என் சிறு வயது வறுமை நிலையை நான் மறக்க மாட்டேன். அதனால்தான் வறுமையில் வாடும் அரசுப் பள்ளி மாணவர்கள் விளையாட்டில் சாதிக்க, என்னால் முடிந்த அளவுக்கு அவர்களுக்குத் துணை நிற்கிறேன். இங்கே படிக்கிற பெரும்பாலான குழந்தைகள் மீனவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
மீன் பிடிக்கப் படகில் செல்வதால் துடுப்பு வலித்து அவர்களின் கைகள் உரமேறியிருக்கும். கடற்கரை மணலில் நடந்து நடந்து கால்கள் எல்லாவிதமான தரைக்கும் ஈடுகொடுக்கிற அளவுக்குப் பக்குவப்பட்டிருக்கும். அதனால் அவர்களுடைய தேவையெல்லாம் சத்தான உணவும் தெளிவான பயிற்சியும்தான்” என்று சொல்லும் கந்தம்மாள் ஒவ்வொரு மாணவனையும் தனியாகப் பார்க்காமல் அவன் குடும்பப் பின்னணியோடு சேர்த்தே பார்க்கிறார். பெற்றோர் இல்லாத குழந்தைகள், மிக மோசமான குடும்பப் பின்னணியில் இருந்து வருகிற குழந்தைகளுக்கு விளையாட்டுப் பயிற்சியுடன் தோல்வியில் துவளாத தன்னம்பிக்கை பயிற்சியையும் சேர்த்தே அளிக்கிறார்.
களம் காணும் மாணவர்கள்
திறந்தவெளி விளையாட்டுகள் மட்டுமல்லாமல் செஸ், கேரம் போன்ற உள்ளரங்க விளையாட்டுகளிலும் மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கிறார். விளையாட்டுப் பொருட்கள் வாங்குவதற்கு அரசாங்கம் கொடுக்கும் பணத்தில் போதுமான அளவுக்கு உபகரணங்கள் வாங்க முடிவதில்லை என்று சொல்லும் கந்தம்மாள், உள்ளூர் பிரமுகர்களின் உதவியுடன் சிலவற்றை வாங்கியிருக்கிறார்.
“குழந்தைங்க விளையாடத் தரமான பந்துகள்கூட இல்லை. எல்லாமே சீக்கிரம் கிழிந்துவிடுகின்றன. பள்ளிக்கு உதவிசெய்ய முன்வருகிறவர்களிடம் நாங்கள் பணமாகப் பெற்றுக் கொள்ளாமல் தேவைப்படும் விளையாட்டு உபகரணங்களைச் சொல்கிறோம். விருப்பம் இருக்கிற சிலர், சில பொருட்களை வாங்கியும் தருகிறார்கள். மாணவர்களை வெளியூரில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளுக்கு அழைத்துச் செல்வதில் இருக்கும் முக்கியச் சிக்கல் போக்குவரத்துச் செலவு. தினசரி வயிற்றுப்பாட்டைச் சமாளிக்கவே சிரமப்படுகிற இந்தக் குழந்தைகளின் பெற்றோரிடமிருந்து எவ்வளவு பணத்தை எதிர்பார்க்க முடியும்?” என்று கேட்கும் கந்தம்மாள் அதற்கும் புரவலர்களின் கைகளைத்தான் எதிர்பார்ப்பதாகச் சொல்கிறார்.
உதவும் மனம் வேண்டும்
பொதுவாக மண்டல, மாநில அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் தனியார் பள்ளி மாணவர்களே அதிகமான பரிசுகளை வெல்வார்கள். ஆனால் இப்போது பரிசு மேடைகளில் கத்திவாக்கம் அரசுப் பள்ளி மாணவர்களையும் பார்க்க முடிகிறது. இந்த முன்னேற்றம் பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
“இந்தக் குழந்தைகள் பல போட்டிகளில் பங்குபெற்று பரிசுகளையும் பதக்கங்களையும் பெறும்போது அவர்கள் முகத்தில் வெளிப்படுகிற மகிழ்ச்சிக்காக எத்தனை படிகள் வேண்டுமானாலும் ஏறி இறங்கலாம். ஹாக்கி, கால் பந்து, பாட்மிண்டன், ஈட்டியெறிதல், வட்டெறிதல், கைப்பந்து போன்றவை விளையாடத் தேவையான உபகரணங்களும் ஆடுகளமும் கிடைத்தால் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்” என்று சொல்கிறார் கந்தம்மாள். வறுமையை விளையாட்டால் வென்றுவிடும் நம்பிக்கையுடன் களம் காண்கிறார்கள் மாணவர்கள்.