அரசுப் பள்ளி வகுப்பறையில் 8-ம் வகுப்பு மாணவர் கொலை: விளாம்பட்டியைத் தொடர்ந்து பந்தல்குடியில் 2-வது சம்பவம்

பாஸ்கர் கொலை செய்யப்பட்ட வகுப்பறையைப் பார்வையிட்ட மாவட்ட எஸ்பி எஸ்.மகேஸ்வரன். உள்படம்: பாஸ்கர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள பந்தல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நேற்று 8-ம் வகுப்பு மாணவர் வகுப்பறையிலேயே முன்னாள் மாணவரால் கொடூரமாக குத்திக் கொலை செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், அயன்கரிசல்குளத்தைச் சேர்ந்தவர் கோபால். மும்பையில் கூலித் தொழியாளியாக உள்ளார். இவரது மனைவி தேவி, மகள் அஸ்வினி (16), மகன் பாஸ்கர். அஸ்வினி, பந்தல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். பாஸ்கர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பில் படித்து வந்தார்.
வழக்கம்போல நேற்றும் காலை 8 மணிக்கே பாஸ்கர் வகுப்பறைக்கு வந்து விட்டார். சக மாணவர்களுடன் அமர்ந் திருந்தபோது, பள்ளியில் 2012-13-ம் கல்வியாண்டில் பிளஸ் 1-ல் தோல்வி யடைந்து, படிப்பை நிறுத்திய அயன்கரிசல் குளத்தைச் சேர்ந்த செல்வம் மகன் மாரீஸ்வரன் அந்த வகுப்பறைக்குள் நுழைந்தார்.
திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பாஸ்கரை கொடூரமான முறையில் பல இடங்களில் குத்தியுள்ளார். இதைக் கண்டு மற்ற மாணவர்கள் அனைவரும் வகுப்பறையிலிருந்து அலறியடித்து வெளியே ஓடிவிட்டனர். மாரீஸ்வரன் அங்கிருந்து வெளியேறி, பள்ளியின் பின்பக்க சுவரில் ஏறிக் குதித்து, அங்கு மோட்டார் சைக்கிளில் காத்திருந்த ஒருவருடன் தப்பிச் சென்றுள்ளார்.
சக மாணவர்கள் ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்துவிட்டு, பள்ளிக்கு எதிரே சற்று தொலைவில் உள்ள காவல் நிலையத்துக்கும் ஓடிச் சென்று சம்பவம் குறித்து போலீஸாரிடம் தெரிவித்தனர். பின்னர், ஆம்புலன்ஸில் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பாஸ்கர் உயிரிழந்தார். தவகலறிந்து வந்த பாஸ்கரின் உறவினர்கள், பந்தல்குடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
தனியார் மில் ஊழியர்
மாரீஸ்வரன் குறித்து போலீஸார் கூறும் போது, படிப்பை நிறுத்திய மாரீஸ்வரன், மல்லாங்கிணற்றில் உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வந்துள்ளார்.
மாரீஸ்வரன் அடிக்கடி தனது கையில் காம்பஸ் கருவியால் கிழித்துக் கொள்வாராம். நோட்டுப் புத்தகங்களில் அரிவாள், கத்தி போன்ற படங்களையும், வெட்டிக் கொலை செய்வது போன்ற படங்களையும் வரைவதை மாரீஸ்வரன் வழக்கமாகக் கொண்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
மாரீஸ்வரனும், பாஸ்கரும் ஒரே ஊர் என்பதால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன் பாஸ்கர் மற்றும் அயன்கரிசல்குளத்தைச் சேர்ந்த வெங்கடேஷ், சந்தோஷ், யுவராஜ், சண்முகம் முத்துராஜ் ஆகியோரை மாரீஸ்வரன் திருச்செந்தூருக்கு அழைத்துச் சென்று அங்கு 5 நாட்கள் தங்கியுள்ளார்.
மகன்களைக் காணவில்லை என்று மாணவர்களின் பெற்றோர் தூத்துக்குடி மாவட்டம், மாசார்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து பாஸ்கரின் தந்தை கோபால் கூறியது: 6 மாதங்களுக்கு முன் எனது மகனை கடத்திச் சென்றபோதே மாரீஸ்வரனை போலீஸார் கைது செய்திருந்தால், இப்போது எனது மகன் பலியாகியிருக்க மாட்டான் என்றார்.
கொலையாளியை கைது செய்யக் கோரி பாஸ்கரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், விளாம்பட்டி யில் பிளஸ் 1 மாணவர் வினோத், சக மாணவரால் வகுப்பறையிலேயே அண்மையில் கொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் வகுப்பறையிலேயே மாணவர் கொலை செய்யப்பட்டது பெற்றோர்களையும், கல்வியாளர்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
மாணவர்களுக்கு கவுன்சலிங்
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ. ஜெயக்குமாரிடம் கேட்டபோது, ‘ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி யில் மாணவ-மாணவிகளுக்கு கவுன்சலிங் கொடுக்க திட்டமிட் டுள்ளோம். மன அழுத்தத்துடன் காணப்படும் மாணவர்களை அழைத்து உரிய ஆலோசனை வழங்கவும், மனநல மருத்துவர் களிடம் அழைத்துச் செல்லவும் பள்ளித் தலைமை ஆசிரியருக் கும், ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.
கொலை நடந்த பந்தல்குடி பள்ளியில் மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரனும் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.
தன்பாலின சேர்க்கையாளர்?
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ். மகேஸ்வரனிடம் கேட்டபோது, ‘பாஸ்கரைக் கொலை செய்ததாகக் கூறப்படும் மாரீஸ்வரன் தன்பாலின சேர்க்கையாளர் என்று கூறப்படுகிறது. இதையறிந்த பாஸ்கர், அதுகுறித்து ஊருக்குள் பலரிடம் சொல்லியதாகவும், இதனால் மாரீஸ்வரனை ஒதுக்கிவைக்க ஊரில் சிலர் முடிவு செய்ததாகவும் தெரிகிறது. இதனால், அவமானமடைந்த மாரீஸ்வரன், பாஸ்கரை கொலை செய்திருக்கலாம். மாரீஸ்வரனைப் பிடிக்க 4 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன’ என்றார்.