சென்னையில், பள்ளிக்குள் புகுந்து துணிகர தாக்குதல் விவகாரம்: ஆசிரியரை தாக்கிய மேலும் 6 பேர் கைது தலைமறைவான தொழில் அதிபர் பற்றி திடுக்கிடும் தகவல்


சென்னை,
சென்னையில், பள்ளியில் புகுந்து ஆசிரியரை தாக்கிய விவகாரத்தில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான தொழில் அதிபர் பற்றி திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

பள்ளிக்குள் புகுந்து தாக்குதல் சென்னை கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனி 4–வது குறுக்கு தெருவில் உள்ள லயோலா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் உடற்பயிற்சி ஆசிரியர் பாஸ்கரை கடந்த 20–ந்தேதி பள்ளிக்குள் புகுந்து மர்ம கும்பல் தாக்கியது.
பள்ளியின் கண்காணிப்பு கேமராவில் பதிவான ஆசிரியர் மீதான தாக்குதல் வீடியோ படமும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆசிரியரை தாக்கிய மர்ம கும்பலை கைது செய்ய வேண்டும் என்று அப்பள்ளி முன்பு பெற்றோர்களும், சக ஆசிரியர்களும் கடந்த 21–ந்தேதி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஆசிரியரை தாக்கிய மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சம்பவம் நடைபெற்ற பள்ளியில் 8–ம் வகுப்பு படிக்கும் அர்னால்டு என்ற மாணவர் உடற்கல்வியின்போது, ‘விசில்’ அடித்து குறும்பில் ஈடுபட்டதும், அதை ஆசிரியர் பாஸ்கர் கண்டித்து, அந்த மாணவனை அடித்ததும் தெரியவந்தது.
மேலும் அடி வாங்கிய மாணவர் அர்னால்டு வீட்டுக்கு சென்று தனது தந்தை தொழில் அதிபரான அருளானந்தத்திடம் சம்பவம் குறித்து கூறியதால், ஆத்திரமடைந்து அருளானந்ததின் தூண்டுதலின்பேரில் தான் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர் பாஸ்கர் மீது துணிகர தாக்குதல் சம்பவம் நடைபெற்றது தெரிய வந்தது.
6 தனிப்படைகள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் நேற்று முன்தினம் சம்பவம் நடைபெற்ற பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து ஆசிரியர் பாஸ்கரை தாக்கிய மர்ம கும்பலை பிடிக்க தியாகராயநகர் துணை கமிஷனர் பகலவன், உதவி கமிஷனர் விஜயராகவன் ஆகியோர் மேற்பார்வையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய அருளானந்தம் நிறுவனத்தில் பணிபுரிந்த 19 பேரை நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
காந்தப்படுக்கை மோசடி... தலைமறைவான தொழில் அதிபர் அருளானந்தம் உள்பட கும்பலை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் ஆசிரியர் மீதான தாக்குதல் விவகாரத்தில் தொடர்புடைய அருளானந்தம் நிறுவனத்தில் பணிபுரியும் நிர்வாகிகள் மகேஷ், கிருஷ்ணமூர்த்தி, பாலசுப்பிரமணி, அருணகிரி, வேலுச்சாமி, தவக்குமார் ஆகிய 6 பேரை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 6 பேரும் சைதாப்பேட்டை 23–வது எம் எம் மாஜிஸ்திரேட்டு ஜெயஸ்ரீ முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு ஜெயஸ்ரீ உத்தரவிட்டார்.
போலீசார் பிடியில் சிக்காமல் தொடர்ந்து தொழில் அதிபர் அருளானந்தம் தறைமறைவாக இருந்து வருகிறார். போலீசார் நடத்திய விசாரணையில், அருளானந்தத்தின் சொந்த ஊர் திருச்சி என்பதும், கடந்த 2002–ம் ஆண்டு நடைபெற்ற காந்தப்படுக்கை மோசடியில் முக்கிய குற்றவாளி என்பதும் தெரிய வந்துள்ளது. இவரை கைது செய்ய தனிப்படை போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் பாஸ்கரை தாக்கிய விவகாரத்தில் இதுவரை 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த ஆசிரியர் பாஸ்கர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.