கடைசி நாளில் கவுன்சிலிங் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை ஐகோர்ட்டில், ஏ.இ.துர்கா என்ற மாணவி ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–

2014–15–ம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். (பல்மருத்துவம்) படிப்புக்கு விண்ணப்பம் செய்தேன். எனக்கு, 30–9–2014 அன்று சென்னையில் நடைபெறும் கவுன்சிலிங்கில் கலந்துகொள்ளும்படி, 2 நாட்களுக்கு முன்பு (செப்டம்பர் 28–ந் தேதி) மருத்துவ கல்லூரியில் இடம் ஒதுக்கீடு செய்யும் தேர்வு குழு எஸ்.எம்.எஸ். அனுப்பியது.
இதன்படி, செப்டம்பர் 30–ந் தேதி பகல் 1.30 மணிக்கு கவுன்சிலிங்கில் கலந்துகொண்டேன். மதுரையில் உள்ள பெஸ்ட் பல் மருத்துவ கல்லூரியில் ஒரு இடம் ஒதுக்கி பகல் 3 மணிக்கு எனக்கு ஆணை வழங்கப்பட்டது. அந்த ஆணையின் அடிப்படையில், அன்று மாலை 4.30 மணிக்குள் மதுரை போய் கல்லூரியில் சேர்ந்துவிடும்படியும் அதிகாரிகள் உத்தரவிட்டனர். நான் உடனடியாக செல்ல முடியாமல் மறுநாள் சென்ற போது, மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டதாக கல்லூரி நிர்வாகம் கூறியது. எனவே, என்னை பல்மருத்துவ படிப்பில் சேர்த்துக்கொள்ளும்படி கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:–
இந்த வழக்கில், மருத்துவ கல்வி தேர்வுக்குழு தவறு செய்துள்ளது. கடைசி நாளான செப்டம்பர் 30–ந் தேதி கவுன்சிலிங் நடத்தி, அன்றே இடம் ஒதுக்கி, அன்றைய தினமே மதுரை போய் கல்லூரியில் சேர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. சென்னையில் இருந்து சுமார் 450 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மதுரைக்கு ஒரு மணி நேரத்தில் மனுதாரரால் எப்படி செல்ல முடியும்? இது சாத்தியமாகும்? மனுதாரர் துர்காவுக்கு சொந்தமாக ஒரு ஜெட் விமானம் இருந்தால்கூட ஒரு மணி நேரத்துக்குள் மதுரைக்கு செல்ல முடியாது.
சுப்ரீம் கோர்ட்டு நிர்ணயித்த ‘கட்–ஆப்’ தேதிக்கு பிறகு கவுன்சிலிங் நடத்தி, மாணவர்கள் இடஒதுக்கீடு செய்து மருத்துவ கல்வி தேர்வுக்குழு உத்தரவு பிறப்பித்தது தவறு. எனவே, மருத்துவ கல்வி தேர்வுக்குழுவின் தவறினால், மனுதாரர் துர்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த அந்த மாணவியின் டாக்டராக வேண்டும் என்ற கனவு சில மணி நேரத்தில் கலைந்துவிட்டது. எனவே, மனுதாரருக்கு ஏற்பட்டுள்ள இழப்பை மருத்துவ கல்வி தேர்வுக்குழு பணமாக வழங்கி சரி செய்யவேண்டும். மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்கிறேன். அவருக்கு, மருத்துவ கல்வி இயக்குனரகம், மருத்துவ கல்வி தேர்வுக்குழு சேர்ந்து 4 வாரத்துக்குள் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.