'எபோலா' வைரஸ் பாதிப்பு: கண்காணிப்பில் 425 பேர்

மதுரை: 'எபோலா வைரஸ் பாதிப்பு உள்ளதா என 425 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்' என மதுரை அரசு மருத்துவமனையில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

'எபோலா' வைரஸ் நோயாளிகள் மற்றும் ரத்தப் பரிசோதனை மாதிரிகளை கையாள்வது குறித்த கருத்தரங்கு நடந்தது. இதில் பொது சுகாதார துறை இணை இயக்குனர் பாலசுப்ரமணியன் பேசியதாவது: தென்னாப்பிரிக்கா, நைஜீரியா உட்பட 5 நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வந்த 1482 பேர் கண்காணிக்கப்பட்டனர். வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெறுபவர், 'டிஸ்சார்ஜ்க்கு' பின் 30 நாட்கள் மருத்துவக் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படுவர். 1051 பேர் 30 நாட்கள் கண்காணிப்பு முடிந்து நலமாக உள்ளனர். 425 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 99 சதவீதம் நைஜீரியாவில் இருந்து வந்தவர்கள் தான். சென்னை, மதுரை, கோவை, திருச்சி அரசு மருத்துவமனைகளில் 'எபோலா' வைரஸ் நோயாளிகளுக்கென தனி வார்டு வசதி செய்யப்பட்டுள்ளது. மற்ற அரசு மருத்துவமனைகளும் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் சேகரிக்கப்படும் ரத்த மாதிரிகள் புனே ரத்தப்பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. இவ்வாறு பேசினார். ராஜிவ்காந்தி மருத்துவக்கல்லூரி பேராசிரியர் ரகுநந்தன், துணை இயக்குனர் ராஜூ ஆகியோர் நோயாளிகளை கையாள்வது குறித்து பேசினர்.