கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவு 4 வாரத்தில் வெளியிடப்படும்தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் தகவல்

தமிழகத்தில் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவுகள் இன்னும் 4 வாரத்தில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர்(பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

குரூப்-2 தேர்வுகள்

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் குரூப்-2 தேர்வுகள் நடைபெற்று வருகிறது. 1,064 பதவிகளுக்கு நடைபெறும் தேர்வில் 11,497 பேர் இரண்டாம் கட்ட ஆன்லைன் தேர்வு மற்றும் விரிவான எழுத்து தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த தேர்வுகள் நேற்று தமிழகம் முழுவதும் 8 மாவட்டங்களில் 44 தேர்வு மையங்களில் நடைபெற்றது. சென்னையில் 12 மையங்களில் நடைபெற்றது.

சென்னை பல்லாவரம் வேல்ஸ் கல்லூரியில் நடைபெற்ற ஆன்லைன் கணினி தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர்(பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார். தேர்வாணைய தேர்வு கட்டுபாட்டு அலுவலர் வி.சோபனா மற்றும் அதிகாரிகள் உடன் வந்தனர்.

ஆன்லைன் தேர்வுகள் நடைபெறுவதை ஆய்வு செய்த பின்னர் தேர்வாணைய பொறுப்பு தலைவர் சி.பாலசுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நேர்முக தேர்வு

குரூப்-2 இரண்டாம் கட்ட எழுத்து தேர்வுகள் நடைபெறுகிறது. 1,064 பணி இடங்களுக்கு 11 ஆயிரத்து 497 பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் 8 மாவட்டங்களில் 44 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. சென்னையில் 12 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.

காலையில் ஆன்லைன் மூலம் தேர்வுகளும் மாலையில் விரிவான எழுத்து தேர்வும் நடைபெறுகிறது. இதில் தேர்வு பெற்றவர்கள் விகிதாசார அடிப்படையில் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதன் பிறகு தேர்ச்சி பெற்றவர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படும்.

4 வாரத்தில் முடிவுகள்

ஆன்லைன் தேர்வுகள் மற்ற குருப் தேர்வுகளிலும் விரிவுபடுத்தப்படும். தமிழகத்தில் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவுகள் வெளியிடும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. இன்னும் 3 அல்லது 4 வாரங்களில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படும்.

குருப்-4 தேர்வுகளுக்கு இதுவரை 6 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இன்னும் நாட்கள் இருப்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இதன் பிறகு அடுத்த தேர்வுகள் நடத்துவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்