கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருதம் 3–வது மொழியாக இருக்கும் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6–ம் வகுப்பு முதல் 8–ம் வகுப்புவரை சமஸ்கிருதம் மூன்றாவது மொழியாக இருக்கும் என்று மத்திய அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது.
 
ஜெர்மன் நீக்கம்
கடந்த மாதம் 27–ந்தேதியன்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிருதி இரானி தலைமையிலான கேந்திரிய வித்யாலயா சங்காதன் அமைப்பின் நிர்வாகக் குழு கூட்டத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழிப்பாடத்தை உடனடியாக ரத்து செய்து விட்டு அதற்கு பதிலாக சமஸ்கிருத பாடத்தை அறிமுகப்படுத்த முடிவு எடுக்கப்பட்டது.

எதிர்ப்பு
மத்திய அரசின் இந்த முடிவு நாடு முழுவதும் உள்ள 500 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6–ம் வகுப்பில் இருந்து 8–ம் வகுப்பு வரை படித்து வரும் சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏற்கனவே படித்து வரும் ஜெர்மன் மொழிக்கு பதிலாக புதிதாக சம்ஸ்கிருதம் மொழியை படிக்க வேண்டியிருக்கும்.

இதுகுறித்து பெற்றோர்கள் மற்றும் தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் இடையில் பெருத்த எதிர்ப்பு கிளம்பியது.

தவறு
மத்திய அரசின் இந்த முடிவை ரத்து செய்யக்கோரி கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:–

கல்வியாண்டில் இடையில், பல மாதங்கள் பாடங்கள் நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வுக்கு தயார் செய்து கொள்ளும் இந்த இடைப்பட்ட காலத்தில் பாடத்திட்டத்தில் உள்ள மொழியை மாற்றும் முடிவை கேந்திரிய வித்யாலயா சங்காதன் எடுத்தது தவறானது.

இந்த முடிவானது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களைக் கலந்து ஆலோசிக்காமலேயே எடுக்கப்பட்ட அவசரமான முடிவாக உள்ளது. எனவே, இதை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

சமஸ்கிருதம்
இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் ஏ.கே.சிக்ரி அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6–ம் வகுப்பில் இருந்து 8–ம் வகுப்புவரை சம்ஸ்கிரும் மூன்றாவது மொழியாக கற்றுத்தரப்படும் என்றும், இதுகுறித்து மத்திய அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்வதற்கு அனுமதி வேண்டும் என்றும் கோரினார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த மனு தொடர்பான விசாரணை வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெறும் என்று உத்தரவிட்டனர்.