மாணவரை அடித்ததால் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர் மீது கொடூர தாக்குதல் நடத்திய கும்பல் 20 பேர் கைது; மாணவரின் தந்தையை கைது செய்ய நடவடிக்கை

சென்னையில் தனியார் பள்ளியில் மாணவரை அடித்த ஆசிரியரை பள்ளிக்குள் புகுந்து ஒரு கும்பல் கொடூரமாக தாக்கியது. இதில் 20 பேர் கைது செய்யப்பட்டனர். வேலையாட்களை அனுப்பிய மாணவரின் தந்தையை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆசிரியர் அடித்தார்

சென்னை, கோடம்பாக்கம், யுனெடெட் இந்தியா காலனி, 4-வது குறுக்குத்தெருவில் லயோலா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. பழமையான இந்த ஆண்கள் பள்ளியில் எல்.கே.ஜி. முதல் பிளஸ்-2 வரை வகுப்புகள் உள்ளன. சுமார் 1,500 மாணவர்கள் படிக்கிறார்கள். 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

நேற்று முன்தினம் மதியம் சாப்பாட்டு வேளை முடிந்தபிறகு, உடற்கல்வி ஆசிரியர் பாஸ்கர்ராஜ், 8-ம் வகுப்பு மாணவர்களை உடற்பயிற்சிக்காக விசிலடித்து அழைத்தார்.

அப்போது அந்த வகுப்பு மாணவர் அர்னால்டும், பதிலுக்கு விசிலடித்து குறும்பில் ஈடுபட்டார். இதைப்பார்த்த ஆசிரியர் பாஸ்கர் ராஜ், மாணவர் அர்னால்டை தலையில் கொட்டியும், கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது.

வேலையாட்களை அனுப்பினார்

அர்னால்டின் தந்தை அருளானந்தம் ‘ரிச் இந்தியா’ என்ற பெயரில் அதே பகுதியில் ‘மல்டி லெவல் மார்க்கெட்டிங்’ நிறுவனம் நடத்தி வருகிறார். தன்னை ஆசிரியர் அடித்தது பற்றி மாணவர் அர்னால்டு, தனது தந்தை அருளானந்தத்துக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார்.

இதனால் கோபம் அடைந்த அருளானந்தம், தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்களை அந்த பள்ளிக்கு அனுப்பினார். பிற்பகல் 3 மணியளவில் அருளானந்தம் அனுப்பிய ஆட்கள், லயோலா பள்ளிக்குள் ஆவேசமாக நுழைந்தனர்.

ஆசிரியர் மீது தாக்குதல்

உடற்கல்வி ஆசிரியர் பாஸ்கர்ராஜ் எங்கே என்று கேட்டு, அவரை சரமாரியாக கொடூரமாக தாக்கினர். தடி, கம்புகளால் அவரை சுற்றி நின்று கண்மூடித்தனமாக அடித்து நொறுக்கினார்கள்.

இந்த தாக்குதலை தாங்க முடியாமல் அவர் மயங்கி விழுந்து விட்டார். தாக்குதல் நடத்திய கும்பல் பள்ளியின் நுழைவு வாயில் கதவையும் பூட்டி விட்டனர். மற்ற மாணவர்களையும் வெளியில் போகவிடாமல் தடுத்து விட்டனர்.

தங்கள் பிள்ளைகளை அழைப்பதற்காக வந்த பெற்றோர்கள் பள்ளிக்கு வெளியே பதறியபடி நின்றனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் தாக்குதல் நடத்திய அந்த கும்பல், அதன்பிறகே வெளியே சென்றனர். இந்த சம்பவம் கோடம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீசில் புகார்

ஆசிரியரை ஆட்களை அனுப்பி தாக்கியதுடன், தொழில் அதிபர் அருளானந்தம் தனது மகன் மீது ஆசிரியர் தாக்குதல் நடத்தியதாக ஆசிரியர் பாஸ்கர்ராஜ் மீது கோடம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார்.

இதற்கிடையில் பள்ளியில் அத்துமீறி நுழைந்து ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் மற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு காட்டுத்தீ போல் பரவியது. இது அவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பெற்றோர்கள் ஏராளமானோர் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் திரண்டு வந்து பள்ளி வாசல் அருகே சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர் பாஸ்கர்ராஜை தாக்கியவர்களையும், தொழிலதிபர் அருளானந்தத்தையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். போலீசார் விரைந்து சென்று அவர்களை சமாதானப்படுத்தியதால் இரவு 10 மணியளவில் போராட்டம் கைவிடப்பட்டது.

மீண்டும் சாலை மறியல்

ஆசிரியர் பாஸ்கர்ராஜை தாக்கியவர்கள் மீதும், தொழிலதிபர் அருளானந்தம் மீதும் கோடம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் இரவே வழக்குப்பதிவு செய்தனர். கொலை முயற்சி உள்பட 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை 9 மணியளவில் தாக்கப்பட்ட ஆசிரியர் பாஸ்கர் ராஜூக்கு ஆதரவாக ஏராளமான ஆசிரியர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே ஆற்காடு ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆசிரியரை தாக்கிய அருளானந்தத்தையும், அவருடைய ஆட்களையும் கைது செய்ய வேண்டும் என்று கோஷம் போட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

ஏற்கனவே கோடம்பாக்கம் மேம்பாலத்தில் பழுதுபார்க்கும் பணி நடப்பதால் ஒரு வழியில் மட்டும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு இருந்தது. சாலை மறியல் போராட்டத்தால் ஒரு வழி பாதையில் சென்ற வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்களை போலீசார் வேறு வழியாக திருப்பி விட்டனர். சுமார் 2 மணிநேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் கிடைத்தவுடன் கூடுதல் கமிஷனர்கள் ஆபாஷ் குமார், திருஞானம், துணை கமிஷனர் பகலவன், உதவி கமிஷனர் விஜயராகவன், இன்ஸ்பெக்டர் கவுதமன் ஆகியோர் விரைந்து சென்று மறியல் போராட்டம் நடத்தியவர்களை சமாதானப்படுத்தினர். ஆசிரியரை தாக்கியவர்களை கைது செய்து வருகிறோம் என்று கூறினார்கள். அதன்பிறகு மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

கமிஷனர் விசாரணை

பிற்பகல் 12.30 மணியளவில் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் நேரடியாக சம்பவம் நடந்த பள்ளிக்கு வந்தார். அங்கு பள்ளியின் தாளாளர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களை சந்தித்து பேசினார். ஆசிரியரை தாக்கியவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

முன்னதாக கமிஷனர் ஜார்ஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘பள்ளிக்கும், ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். சட்டத்தை தன் கையில் எடுப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றமாக இருந்ததால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

20 பேர் கைது

இதற்கிடையில் ஆசிரியர் பாஸ்கர்ராஜை தாக்கிய 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நேற்று மாலை போலீசார் கூறினார்கள். ஆட்களை ஏவிவிட்ட தொழிலதிபர் அருளானந்தமும் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் போலீசார் தெரிவித்தனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த ஆசிரியர் பாஸ்கர்ராஜ் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதேபோல் மாணவர் அர்னால்டும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அந்த கொடூரமான வீடியோ காட்சிகளும் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.