ரேஷன் அட்டைகள் 2015 டிசம்பர் வரை செல்லும்: தமிழக அரசு

ரேஷன் கடை | கோப்புப் படம்தற்போது பயன்படுத்தி வரும் ரேஷன் அட்டைகள் 2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளை 2015-ம் ஆண்டிற்கு புதுப்பிக்கும் வகையில் உள்தாள்களை அச்சிட்டு, குடும்ப அட்டையில் இணைத்து, குடும்ப அட்டையின் செல்லத்தக்ககாலத்தை 01.01.2015 முதல் 31.12.2015 வரை நீட்டிக்க அரசு ஆணையிட்டுள்ளது என்று உணவுத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

குடும்ப அட்டைதாரர்கள் நியாயவிலைக் கடைகளுக்கு டிசம்பர் மாதம் அத்தியாவசியப் பொருட்கள் பெறவரும்போது அவர்களுடைய குடும்ப அட்டையில் 2015-ம் ஆண்டிற்கான உள்தாளினை இணைத்து வழங்குமாறும் உத்திரவிடப்பட்டுள்ளது.

எப்பொருளும் வேண்டா குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள்கணினி மூலம் புதுப்பித்துக் கொள்ளவும் வழிவகைசெய்யப்பட்டுள்ளது.

பொது விநியோகத் திட்டத்தின் மூலம் குடும்பஅட்டைதாரர்களுக்கு வழங்குவதற்கு போதுமான தரமான விலையில்லா அரிசி அனைத்து கிடங்குகளிலும் சுமார் 3மாததேவைக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை, கோதுமை,பாமாயில், பருப்பு வகைகள் உள்ளிட்ட ஏனைய அத்தியாவசியப் பொருள்களும் சீரானமுறையில் விநியோகம் செய்வது உறுதி செய்யப்பட்டு வருகிறது.

பொது விநியோகத் திட்ட கிடங்குகளிலிருந்து நியாயவிலைக்கடைகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் நகர்வு செய்யப்படுவதைகண்காணிக்கவும், கடைகளில் உள்ள பொருள்களின் இருப்பினை அறிந்து அவ்வப்போது தேவையான பொருள்களை நகர்வு செய்யவும்,

புதிய குடும்ப அட்டைகளை வழங்கவும், போலி குடும்ப அட்டைகளை களையவும், இத்திட்டங்களை கணினி மயமாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.