டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு; மாவட்டத்தில் 831 பேர் பங்கேற்பு

கடலூர் : கடலூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வை 831 பேர் எழுதினர்.

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் குரூப் 2 தேர்வு கடந்த டிசம்பர் 1ம் தேதி நடந்தது. அதில் தேர்ச்சி பெற்றவர்கள், மொத்த பணியிடத்திற்கு 1க்கு 10 பேர் வீதம் இரண்டாம் கட்ட தேர்வுக்கு கடலூர் மாவட்டத்தில் 923 பேர் அழைப்பு விடப்பட்டிருந்தது.இந்த தேர்வு கம்ப்யூட்டரில் ஆன்லைன் மற்றும் எழுத்து என இரு தேர்வு நடைபெற்றது. இதற்காக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம், காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லூரி, தொழுதூர் நாவலர் பொறியியல் கல்லூரி, பண்ருட்டி செயின்ட் ஆன்ஸ் பொறியியல் கல்லூரி மற்றும் கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரி ஆகிய ஐந்து மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஐந்த மையங்களில் 831 பேர் ஆன் லைனில் தேர்வு எழுதினர். அனுமதிக்கப்பட்டவர்களில் 92 பேர் தேர்வு எழுதவில்லை. பிற்பகல் எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரி மனோகர் மற்றும் அந்தந்தப் பகுதி வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.