நிலக்கோட்டையில் தலையில் ஓங்கி அடித்ததில், பிளஸ்-1 மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு

நிலக்கோட்டையில் பள்ளி வளாகம் அருகே, சக மாணவன் தலையில் ஓங்கி அடித்ததில் பிளஸ்-1 மாணவன் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த விளாம்பட்டியில் கள்ளர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் அதே பகுதியில் உள்ள எத்திலோடு காலனியை சேர்ந்த ஆசைத்தம்பி என்பவரது மகன் வினோத் (வயது 16) பிளஸ்1 படித்து வந்தான். இவனுக்கும் அவனுடன் படிக்கும் முத்தலாபுரத்தைச் சேர்ந்த மற்றொரு மாணவனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் காலையில் அவர்கள் 2 பேரும் பள்ளிக்கு வந்திருந்தனர். பின்னர் வகுப்புகள் தொடங்கிய நிலையில் இடைவேளைக்கான மணி ஒலித்தது. அப்போது வினோத் தனது நண்பர்களுடன் பள்ளிக்கூடத்தின் வெளிப்பகுதிக்கு சிறுநீர் கழிப்பதற்காகச் சென்றான். அங்கு வந்த முத்தலாபுரத்தை சேர்ந்த மாணவனுக்கும், வினோத்துக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது அந்த மாணவன், வினோத் தலையின் பின்பக்கத்தில் தனது கையால் ஓங்கி அடித்துள்ளான்.

உடனே வினோத் சுயநினைவு இழந்து கீழே சரிந்தான். இதனை பார்த்த மற்ற மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது வினோத் மயங்கிய நிலையில் கிடந்துள்ளான். உடனடியாக சம்பவம் குறித்து அவனது தந்தை ஆசைத்தம்பிக்கு தலைமை ஆசிரியர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து தனது நண்பரான பாண்டி என்பவருடன் அவர் அங்கு வந்து, மகனை ஒரு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது வழியில் உள்ள ஒரு மருந்துக்கடையின் பணியாளர், வினோத்துக்கு முதல் உதவி சிகிச்சை அளிப்பதற்காக வந்தார். அவரது பரிசோதனையில் அவன் இறந்துபோனது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த வினோத்தின் தந்தை கதறி அழுதார். பின்னர் அவனது உடல் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஆசை கொடுத்த புகாரின் பேரில் விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், முத்தலாபுரத்தை சேர்ந்த மாணவன் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். பின்னர் அவனை போலீசார் கைது செய்தனர். இருப்பினும் மாணவர்களுக்கிடையே தகராறு நடப்பது என்பது பள்ளிக்கூடத்தில் வழக்கம்தான்.

ஆனால் அது ஒரு மாணவனின் உயிரை பறிக்கும் வரை ஆசிரியர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று கேட்டும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பலியான மாணவன் வினோத்தின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் பள்ளி வளாகம் மற்றும் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  பின்னர் போலீசார் வந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.