உதவித் தொகை: கணிதத்தில் பிஎச்.டி. படிக்க மாதம் ரூ.16 ஆயிரம்

பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி), மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சிக் கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) நடத்தும் நெட் தகுதித் தேர்வில் ஜெஆர்எப் (ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப்) தகுதி பெறும் முதுகலைப் பட்டதாரிகள் பிஎச்டி படிப்பதற்காக மாதம்தோறும் கல்வி உதவித்தொகை
வழங்கப்படுகிறது. இதேபோல், மத்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய உயர்கணித வாரியம் (National Board for Higher Mathematics) கணிதம் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் பிஎச்டி படிக்க மாதம்தோறும் கல்வி உதவித்தொகை வழங்குகிறது.
4 ஆண்டு கால இந்த உதவித்தொகைத் திட்டத்தில் முதல் 2 ஆண்டுகளில் மாதம் ரூ.16 ஆயிரமும், எஞ்சிய 2 ஆண்டுகளில் ரூ.18 ஆயிரமும் உதவித்தொகை பெறலாம். இது தவிர எதிர்பாராத கல்வி செலவினங்களுக்காக ஆண்டுக்குத் தனியாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். உதவித்தொகைக்கு ஏற்ப, மத்திய அரசு விதிமுறையின்படி வீட்டு வாடகைப்படியும் (House Rent Allowance) உண்டு.
உதவித்தொகை பெற தேர்வுசெய்யப்படும் மாணவர்கள் சென்னை தரமணியில் உள்ள கணிதவியல் கல்வி நிறுவனம் (Institute of Mathematical Science) உட்பட குறிப்பிட்ட சில உயர் கல்வி நிறுவனங்களில் கணித பாடத்தில் பிஎச்டி சேர வேண்டும்.
நுழைவுத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானோர் தேர்வுசெய்யப்படுவார்கள். இந்த நுழைவுத்தேர்வை எம்எஸ்சி (கணிதம்) முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் எழுதலாம். 2015-2016-ம் ஆண்டுக்கான பிஎச்டி உதவித்தொகைத் திட்டத்துக்கான அறிவிப்பை தேசிய உயர்கணித வாரியம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, நுழைவுத்தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 24-ம் தேதி சென்னை, பெங்களூரு, கொச்சி, ஐதராபாத் உள்பட நாடு முழுவதும் முக்கிய பெருநகரங்களில் நடத்தப்பட உள்ளது. 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அல்லது அதற்கு முன்பு எம்.எஸ்.சி பட்டம் பெறும் மாணவ-மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர் ஆவர்.
தகுதியுடைய மாணவர்கள், தங்கள் பெயர், பிறந்த தேதி, தேசியம், பாலினம், தேர்வு மையம், அஞ்சல் முகவரி, இ-மெயில் முகவரி, தொலைபேசி அல்லது செல்போன் எண், தற்போது படிக்கும் கல்வி நிறுவனம், படிக்கும் ஆண்டு, கல்வித்தகுதி (எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2, பட்டப் படிப்பு, முதுகலைப் படிப்பு ஆகிய தகுதிகள், கல்வி நிறுவனம், தேர்வு வாரியம், தேர்ச்சி பெற்ற ஆண்டு, மதிப்பெண், சதவீதம், பாடம் ஆகிய விவரங்களுடன்) ஆகியவற்றைக் குறிப்பிட்டு போட்டோ ஒட்டி விண்ணப்பமாகத் தயார்செய்ய வேண்டும்.
கீழே கையெழுத்திட வேண்டியது அவசியம்.
சென்னை, பெங்களூரு, கொச்சி, ஐதராபாத் ஆகிய தேர்வு மையங்களைத் தேர்வுசெய்யும் மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை “Prof.S.Kesavan, Institute of Mathematical Science, C.I.T. Campus, Taramani, Chennai 600 113” (Email: kesh@imsc.res.in) என்ற முகவரிக்கு டிசம்பர் மாதம் 8-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தின் மேல் “NBHM Ph.D. Scholarship” என்று குறிப்பிடுவதுடன் ரூ.5 ஸ்டாம்பு ஒட்டப்பட்ட, சுயமுகவரி எழுதிய தபால் உறையையும் இணைத்திட வேண்டும். கூடுதல் விவரங்களை www.nbhm.dae.gov.in என்ற இணையதளத்தில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
முக்கிய தேதிகள்
விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 8
ஜனவரி முதல் வாரத்திற்குள் ஹால்டிக்கெட் வராவிட்டால் மண்டல ஒருங்கிணைப்பாளரைத் தொடர்புகொள்ள கடைசித் தேதி: ஜனவரி. 5
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: ஜனவரி. 24