கல்லூரிகளில் 10 ஆயிரம் ஆசிரியர்கள் இல்லை: நிரப்ப உத்தரவிடுமா யு.ஜி.சி.,

கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை, தகுதியான ஆசிரியர்களை கொண்டு நிரப்ப, யு.ஜி.சி., உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

'பல்கலைகளில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களை, அடுத்த கல்வி ஆண்டிற்குள் நிரப்ப வேண்டும்' என, பல்கலை மானியக் குழு - யு.ஜி.சி., சமீபத்தில் உத்தரவிட்டது. சில பல்கலைகளில், ஏற்கனவே இப்பணி துவங்கி விட்டது. சென்னை பல்கலையில், சமீபத்தில், 90 பணியிடங்கள் நிரப்பப்பட்டன; தற்போதும் நேர்காணல் நடந்து வருகிறது. அதே நேரத்தில், தமிழகத்தில் உள்ள அரசுக்கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், 10 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஈரோடு, கோவையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில், தகுதியான பேராசிரியர்கள் இல்லாததை கண்டித்து, மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, கல்வியாளர் ஒருவர் கூறியதாவது: அரசு உதவி பெறும் கல்லூரிகளில், பல, யு.ஜி.சி.,யின் நிதி பெறுகின்றன. எனவே, அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில், காலிப்பணியிடங்களை நிரப்ப, உத்தரவிட வேண்டும். கல்லூரிகளில், கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை எடுக்கும் நிலை உள்ளது. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சில கல்லூரிகளுக்கு மட்டும், பணியிடங்கள் நிரப்ப அரசு ஒப்புதல் வழங்குகிறது. இதையும் யு.ஜி.சி., கண்காணிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.