சிம் கார்டு வாங்க ஆதார் அட்டை : மத்திய அரசு தீவிர பரிசீலனை

புதுடில்லி : 'புதிதாக, 'சிம்' கார்டு வாங்குவோர், ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாமா' என, மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும்,
தொலை தொடர்புத் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மொபைல் போன்களில் பயன் படுத்தப்படும், 'சிம்' கார்டுகளை, புதிதாக வாங்குவோர், தற்போது, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ் போன்றவற்றை அடையாள ஆவணமாகத் தருகின்றனர். இந்த ஆவணங்களை, சம்பந்தப்பட்ட தொலை தொடர்பு நிறுவனங்கள் சரிபார்த்த பின், குறிப்பிட்ட 'சிம்' கார்டுகள் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.இப்படி, 'சிம்' கார்டு வாங்குவோர் சமர்ப்பிக்கும் அடையாள ஆவணங்களை, ஆன் - லைன் முறையில் சரிபார்க்கும் திட்டத்தை அமல்படுத்த, மத்திய தொலை தொடர்புத் துறை ஆலோசித்து வருகிறது.

இந்த ஆன் - லைன் முறையை அறிமுகம் செய்தால், 'சிம்' கார்டு வாங்குவோர், தங்களின் இருப்பிட முகவரி சான்றாக, ஆதார் அட்டையின் நகலை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும். அப்படி சமர்ப்பித்தால், ஆதார் அட்டையில் உள்ள எண் மூலம், ஒருவரின் முகவரியை எளிதில் சரிபார்த்து விடலாம் என, தொலை தொடர்புத் துறை நினைக்கிறது.இருந்தாலும், உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக, சில சந்தேகங்களை கிளப்பி உள்ளதால், அந்தப் பிரச்னையை எப்படி தீர்க்கலாம் என்பது தொடர்பாக, சம்பந்தப்பட்ட தரப்பினருடன், தொலை தொடர்புத் துறை ஆலோசித்து வருகிறது.