ஆதி திராவிடர், கள்ளர் பள்ளிகளில் இடை நிலை ஆசிரியர் நியமனத்துக்கு இடைக்கால தடை

ஆதி திராவிடர், கள்ளர் பள்ளிகளில் இடை நிலை ஆசிரியர் நியமனத்துக்கு இடைக்கால தடை வித்தித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்தவர் சுடலைமணி என்பவர் மதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார். அதில்," அரசு ஆதிதிராவிட நலப்பள்ளிகளில் 669 இடைநிலை ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்கள் உள்ளன. இதேபோல் அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 64 இடைநிலை ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்கள் உள்ளது.
அரசு ஆதிதிராவிடர் பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை ஆதிதிராவிடர், அருந்ததியினர் ஆகிய சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பணி நியமனம் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.இந்த காலி பணியிடங்களை நிரப்புவதில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை. அரசியல் அமைப்பின் சட்டப்படி இட ஒதுக்கீட்டு முறையில் பணி நியமனம் மேற்கொள்ள வேண்டும். இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படாமல் அரசு ஆதிதிராவிட நலப் பள்ளிகள், அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் காலி பணியிடங்கள் நிரப்புவது நியாயமற்றது. எனவே மேற்கண்ட பள்ளிகளில் காலி பணியிடங்களை நிரப்ப தடை விதிக்க வேண்டும் எனக் கூறி இருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி  டி.ராஜா, ஆதி திராவிடர், கள்ளர் பள்ளிகளில் இடை நிலை ஆசிரியர் நியமனத்துக்கு இடைக்கால தடை வித்தித்து தீர்ப்பளித்தார்.