தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் பார்வையாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களாக மாவட்டந்தோறும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிறப்பு ஏற்பாடுகள்

தமிழகத்தில் 1.1.15 அன்று 18 வயது பூர்த்தி அடையும் நபர்களை வாக்காளர்களாகச் சேர்ப்பதற்கான, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த பணி நடைபெற்று வருகிறது. இதில் புதிதாக பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், திருத்தம் ஆகியவற்றுக்காகவும் விண்ணப்பிக்கலாம்.

மேலும், ஆன்-லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான வசதிகளையும் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி செய்து கொடுத்துள்ளார். அதன்படி, வீட்டில் இருந்தபடியே பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம். கம்ப்யூட்டர் மையங்களிலும் இதற்கான சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

சென்னை, திருவள்ளூர்

தற்போது வாக்காளர் பட்டியல் கண்காணிப்பாளர்களாக மாவட்டந்தோறும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு:-

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களுக்கு, சர்வ சிக்ஷ அபியான் திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி; விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூருக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குனர் ஏ.சுகந்தி;

திருச்சி, கடலூர்

தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களுக்கு தமிழ்நாடு எரிசக்தி முகமையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சுதீப் ஜெயின்; அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கடலூருக்கு சிறுபான்மை நல கமிஷனர் ஏ.முகமது அஸ்லாம்;

நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களுக்கு நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் நகர்ப்புற நில வரி கமிஷனர் பி.அண்ணாமலை; நாமக்கல், கரூர், திண்டுக்கல் ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி கமிஷனர் எம்.ஏ.சித்திக்;

நெல்லை, தூத்துக்குடி

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு தமிழ்நாடு காதி மற்றும் கிராமத் தொழில் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி கா.பாலச்சந்திரன்; மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களுக்கு கோ ஆப்-டெக்ஸ் நிர்வாக இயக்குனர் டி,.என்.வெங்கடேஷ்;

ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நல மாநில கமிஷனர் கே.மணிவண்ணன்; தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனர் சி.சமயமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்