வங்கித் தேர்வுகள் | ஆன்லைன் தேர்வுகளில் பயிற்சி எடுங்கள்!

வங்கித்தேர்வுக்கான அடிப்படைப் பாடத்திட்டங்களையும், அவற்றில் எந்த மாதிரியான கேள்விகள் கேட்கப்படுகின்றன என்பதையும் முன்னதாகப் பார்த்தோம்.

வங்கித்தேர்வுக்காக படித்துத் தயாராகி வருபவர்களுக்காக பல பயிற்சிமையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவர்களில் ஒருவரான சென்னை சைதாப்பேட்டை வெங்கடேஸ்வரா ஸ்கூல் ஆப் பேங்கிங் பயிற்சி மையத்தின் இயக்குநர் பி.அங்கமுத்து சில ஆலோசனைகளை நம்மிடையே பகிர்ந்துகொள்கிறார்.
ஆன்லைன் தேர்வு
“வங்கி எழுத்தர் தேர்விலும் சரி, வங்கி அதிகாரி தேர்விலும் சரி மிகவும் முக்கியமானது ரீசனிங் பகுதி. முதலில் அடிப்படையானக் கருத்துகளைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அடுத்ததாக, மாதிரிக் கேள்விகளுக்கு விரைவாக விடையளித்துப் பயிற்சி பெற வேண்டும்.
மாதிரி கேள்விகளுக்கு விடையளித்துப் பயிற்சி பெறுவதற்கு ஆன்லைன் தேர்வுகளில் பங்கேற்பது மிகவும் உதவும். இதற்காக ஏராளமான இலவச ஆன்லைன் தேர்வுகள் இணையதளத்தில் உள்ளன. கூகுள் இணையதளத்துக்குச் சென்று பேங்கிங் ஆன்லைன் டெஸ்ட் என்று குறிப்பிட்டால் போதும். ஏராளமான ஆன்லைன் தேர்வு இணையதளங்கள் மளமளவென வந்துவிடும். ஆன்லைன் தேர்வில் கலந்துகொள்ளும்போதுதான் நாம் எந்தப் பகுதியில் பலவீனமாக இருக்கிறோம் என்பது நமக்குத் தெரிய வரும். அதைச் சரிசெய்தால் போதும். வெற்றி உறுதி.
வங்கி எக்ஸ்பர்ட்
மேற்கண்ட இதே வழிமுறைகள்தான் கணிதத்திறன் பகுதிக்கும் பொருந்தும். பொது அறிவு பகுதியைப் பொருத்தமட்டில், வங்கி தொடர்பான விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்துப் படிக்க வேண்டும். இதற்குத் தினசரி நாளிதழ் வாசிப்பு பெரிதும் உறுதுணையாக இருக்கும். செய்திகளில் அடிபடும் முக்கிய நபர்கள், முக்கிய இடங்கள், விருதுகள், விளையாட்டுப் போட்டிகள், தேசிய, சர்வதேச நிகழ்வுகள், வங்கிப்பணி தொடர்பான சீர்திருத்தங்கள் போன்றவை முக்கியமானவை. உதாரணத்துக்கு, அண்மையில் பிரதமரின் ஜன் தன் யோசனா (அனைவருக்கும் வங்கிச்சேவை திட்டம்) தொடங்கப்பட்டது. இப்படி வங்கி தொடர்பான நடப்பு நிலவரங்களை விரல் நுனியில் வைத்திருங்கள்.
வங்கி எக்ஸ்பர்ட் ஆகுங்கள். அது வங்கித்தேர்வுக்குப் பெரிதும் கைகொடுக்கும். அதேபோல், வங்கி தொடர்பான சட்டங்கள், நெப்ட், ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனைகள், உலக நாடுகளின் நாணயங்கள், நாடுகளின் தலைமை வங்கிகள் போன்றவை குறித்தும் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.
கணினி அறிவு
ஆங்கில மொழித்திறனில் சொல்வளம் (vocabulary), அடிப்படை ஆங்கில இலக்கணம், பொதுப் புத்திக்கூர்மை ஆகியவற்றை ஆராயும் வகையிலேயே கேள்விகள் கேட்கப்படுகின்றன. தினசரி ஆங்கில நாளிதழ்களைப் படித்து வந்தால் இப்பகுதி வினாக்களுக்கு எளிதாக விடையளித்துவிடலாம். கணினி பகுதியில் இண்டர்நெட், எம்எஸ் ஆபீஸ் இயக்கங்கள் மற்றும் கணினி தொடர்பான அடிப்படை விவரங்கள் தெரிந்திருந்தால் போதுமானது.
வங்கித்தேர்வுகளில் மொத்தமுள்ள 200 கேள்விகளுக்கு 70 முதல் 80 வினாக்களுக்குச் சரியாக விடையளித்துவிட்டாலே வெற்றி உறுதி” என்கிறார் அங்கமுத்து.
அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் வங்கித்துறைகளில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, எதிர்காலத்தில் வங்கித்துறையில் வேலைவாய்ப்புகள் மிகுதியாக இருக்கும் என்கிறார் அவர்.
வங்கித்தேர்வுக்கு பயிற்சி அளித்து வரும் பயிற்சியாளர்கள் திரும்பத் திரும்பச் சொல்லும் ஒரு விஷயம் ஒன்றுதான். அது பயிற்சி. பயிற்சி. பயிற்சி. அதுவே உங்களை நோக்கி வெற்றியை இழுத்துவரும்.