அடையாள அட்டை அணியாத அரசு ஊழியர்கள்! காற்றில் பறந்த கலெக்டரின் உத்தரவு

கோவை : அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிந்து பணியாற்ற வேண்டும் என கலெக்டர் பிறப்பித்த உத்தரவு, செயல்படுத்தப்படாமல் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், சோமனுார் அடுத்த தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் சரவணன்; கலெக்டர் அலுவலகத்தில், கடந்த ஜூனில் நடந்த குறைதீர்ப்பு முகாமில் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், கோவை மாவட்டத்தில், எந்த அரசு அலுவலகத்திலும் பொது ஊழியர்கள், அடையாள அட்டை அணிந்து பணிபுரிவதில்லை. இதனால், அரசு அலுவலகத்தில் அரசு ஊழியர்கள், பொதுமக்கள், இடைத்தரகர்களை அடையாளம் காணமுடிவதில்லை.'தாலுகா அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் போல, இடைத்தரகர்கள் நடமாடி வருகின்றனர். எனவே நிர்வாக சீர்திருத்த துறை ஆணை எண் ௩௬௩ன் படி, அரசு ஊழியர்கள், அடையாள அட்டை அணிந்து பணிபுரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.இது தொடர்பாக, முதல்வரின் தனிப்பிரிவுக்கும் மனு அனுப்பினார்.

இதையடுத்து, கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், அனைத்து சார் நிலை அலுவலர்களுக்கு பிறப்பித்த உத்தரவில், 'அரசு ஊழியர்கள் அனைவரும், அலுவலக பணிநேரத்தின் போது, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணிந்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில், இந்த நடைமுறை கடை பிடிக்காததால், அரசு ஊழியர்கள் மற்றும் ஊழியர்கள் அல்லாதவர்களை அடையாளம் காண்பதில் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது தெரிய வருகிறது. எனவே, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலர்களும், அரசின் உத்தரவை பின்பற்ற வேண்டும்; அந்த விபரத்தை அறிக்கை வாயிலாக உடனடியாக தெரிவிக்க வேண்டும்' என, குறிப்பிட்டு இருந்தார்.

மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்பட்டதாகவும், இது குறித்து அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சரவணனுக்கு பதில் அனுப்பப்பட்டது. ஆனால், அதன்பிறகும் அரசு அலுவலகங்களில், கலெக்டரின் உத்தரவு பின்பற்றப்படவில்லை.இதையடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், சரவணன் மனு அனுப்பினார். அந்த மனுவில், அரசு ஆணைகள் மற்றும் கலெக்டரின் உத்தரவுகளை மதிக்காத அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உதவும் சட்டங்கள் மற்றும் அதன் பிரிவுகளை தகவலாக வழங்குமாறு மனுவில் கேட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள மாவட்ட பொது தகவல் ஆணையர், 'கலெக்டரின் உத்தரவுகளை மதிக்காத அரசு பொது ஊழியர்கள் மீது, தமிழ்நாடு குடிமுறைப்பணிகள் விதி ௧௭ன் கீழ் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது' என, தெரிவித்துள்ளார். ஆனால், அடையாள அட்டை அணியாத அரசு ஊழியர்கள், உத்தரவை பின்பற்றாத துறை அதிகாரிகள் மீது மாவட்ட கலெக்டர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

கோர்ட் ஊழியர்களுக்கு ஐ.டி., கார்டு : கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள கோர்ட்டுகளில், அடையாள அட்டை இல்லாமல் ஊழியர்கள் பணியாற்றுவதால், பல்வேறு தவறுகள் நடப்பதாக புகார் வந்தது. இதையடுத்து அனைத்து ஊழியர்களும் அடையாள அட்டை அணிய வேண்டும் என, மாவட்ட நீதிபதி கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, தற்போது அனைத்து கோர்ட் ஊழியர்களும் அடையாள அட்டை அணிந்து பணியாற்றி வருகின்றனர். இதை முன் உதாரணமாக எடுத்துக்கொண்டு, அனைத்து அரசு அலுவலகங்களிலும் பின்பற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.