ஆதார் அடையாள அட்டையை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் ஏற்கத்தக்க அடையாள ஆவணமாக கருத வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும், உள்துறை அமைச்சகத்தின் சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், ''ஒரு நபருக்கு ஒரு அடையாள எண் மட்டுமே ஒதுக்கப்படுகிறது என்பதாலும், கை ரேகை,
கண் கருவிழி உள்ளிட்டவற்றின் தகவல்கள் பதிவு செய்யப்படுவதாலும், ஆதார் அட்டையை சிறந்த அடையாள குறியீடாக ஏற்கலாம்" என்று கூறப்பட்டுள்ளது.


ஆதார் எண் திட்டம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இதுவரை 67 கோடியே 38 லட்சம் பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அரசின் சார்பில் வழங்கப்படும் சேவைகளுக்கு ஆதார் எண்ணை ஒரு முழுமையான அடையாள ஆவணமாக ஏற்க உள்துறை அமைச்சகம் தயங்கி வந்த நிலையில், தற்போது இந்தக் கடிதம் அனைத்து மாநில அரசுகளுக்கும் எழுதப்பட்டுள்ளது.