தீபாவளி கொண்டாட்டம்: விலங்குகளை துன்புறுத்தினால் நடவடிக்கை


விலங்குகளைத் துன்புறுத்தும் வகையில் பட்டாசு வெடிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை கால்நடை துயர்துடைப்புக் கழகம் தெரிவித்துள்ளது.

 இதற்காக அந்த கழகத்தைச் சேர்ந்தவர்கள் தீபாவளி தினத்தில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்.
 இது குறித்து சென்னை கால்நடை துயர்துடைப்புக் கழகத்தின் செயலாளர் தியாகராஜன் கூறியது:-
 தீபாவளி தினக் கொண்டாட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பது பட்டாசுகள். ஆனால் அதிக ஒலி எழுப்பக் கூடிய பட்டாசுகளால் தெரு மற்றும் வீட்டு விலங்குகள் பாதிக்கப்படுகின்றன. இதைத் தவிர கழுதை, நாய், பூனை, மாடு உள்ளிட்ட விலங்குகளின் வாலில் பட்டாசுகளைக் கட்டி தொங்க விட்டு வெடிக்கும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.
 விலங்குகளைத் துன்புறுத்தும் வகையில் பட்டாசுகள் வெடிப்பவர்களைக் கண்காணிக்கும் பணியில் எங்கள் அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். அத்தகைய சம்பவங்களில் ஈடுபடுவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
 இது குறித்து புகாரளிக்கவும், காயமடைந்த விலங்குகளுக்கு சிகிச்சையளிக்கவும் 98401 83177, 94441 00287, 044-25611628 என்ற எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.