ஊதிய உயர்வு வழங்கக்கோரி வங்கி ஊழியர்கள் 12–ந்தேதி ஒரு நாள் வேலை நிறுத்தம் சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்

சென்னை,
ஊதிய உயர்வு வழங்கக்கோரி வங்கி ஊழியர்கள் 12–ந்தேதி ஒரு நாள், நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். சென்னையில் நாளை (வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

இதுகுறித்து அகில இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் தமிழ்நாடு பிரிவு அமைப்பாளர் சி.எம்.பாஸ்கரன், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–
ஊதிய உயர்வு வங்கி ஊழியர்களுக்கு ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 2012–ம் ஆண்டு நவம்பர் மாதம் வழங்கப்பட வேண்டிய சம்பள உயர்வு வழங்காததால், இந்திய வங்கிகளின் நிர்வாகத்துடன் தொடர்ந்து 13 முறை வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
கடந்த முறை ஊதிய உயர்வு 17.5 சதவீதம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அதைவிட கூடுதலாக 25 சதவீதம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் வாராக்கடன் அதிகரிப்பதால் லாபம் குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் 11 சதவீதத்துக்கு மேல் ஊதிய உயர்வு வழங்க வங்கிகள் நிர்வாகம் மறுத்து வருகிறது.
ஆனால் 2012–2013–ம் ஆண்டுகளில் வங்கிகள் நிர்வாகத்துக்கு ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 943 கோடி மொத்த லாபம் கிடைத்துள்ளது. இதில் வாராக்கடன் சுமார் ரூ.70 ஆயிரம் கோடி வராமல் போனாலும், ரூ.50 ஆயிரம் கோடி வரை நிகர லாபம் கிடைத்துள்ளது.
12–ந்தேதி வேலைநிறுத்தம் வங்கி ஊழியர்களுக்கு மருத்துவ உதவிகளை மேம்படுத்த வேண்டும். வரையறுக்கப்பட்ட வேலை நேரத்தை கொண்டுவருவதுடன், வாரம் 5 நாட்கள் வேலை திட்டத்தையும் அமல்படுத்த வேண்டும். ஓய்வூதிய திட்டத்தையும், குடும்ப ஓய்வூதிய திட்டத்தையும் மேம்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு நாளையுடன் (வியாழக்கிழமை) 2 ஆண்டுகள் நிறைவடைவதால் அன்றைய தினத்தை எதிர்ப்பு தினமாக அனுஷ்டிக்கும் வகையில் அன்று மாலை 5.30 மணிக்கு சென்னை அண்ணாசாலையில் உள்ள சிண்டிகேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
நவம்பர் 12–ந்தேதி ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். இதில் தமிழ்நாட்டில் உள்ள 6 ஆயிரம் கிளைகளில் பணியாற்றும் 75 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்கின்றனர். நாடு முழுவதும் 10 லட்சம் ஊழியர்கள் கலந்துகொள்கின்றனர்.
மண்டல வாரியாக வேலைநிறுத்தம் தொடர்ந்து நாடு முழுவதும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, வரும் டிசம்பர் 2–ந்தேதி தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி, லட்சத்தீவு பகுதிகளை கொண்ட தெற்கு மண்டலத்திலும், டிசம்பர் 3–ந்தேதி கிழக்கு மண்டலத்தில் உள்ள மாநிலங்களிலும், 4–ந்தேதி கிழக்கு மண்டலத்தில் உள்ள மாநிலங்களிலும், 5–ந்தேதி மேற்கு மண்டலத்தில் உள்ள மாநிலங்களிலும் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதற்கு பிறகும் வங்கி ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையென்றால், அகில இந்திய வங்கி ஊழியர்களின் உத்தரவை ஏற்று காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யவும் தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.