P.hd., M.Phil கல்வி கட்டணம் ஆராய்ச்சி படிப்பு - மாணவர்கள் அதிர்ச்சி!!

ஆய்வுப் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் இரு மடங்கு உயர்ந்துள்ளதால், ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி என்பது எட்டா கனியாக மாறிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பல்கலைகள் உடனடியாக கல்வி கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 
           தமிழகத்தில், சென்னை பல்கலை, பாரதியார், பாரதிதாசன், மதுரை காமராஜர் பல்கலை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, பெரியார் பல்கலை உட்பட, 20 பல்கலைகள் உள்ளன. இப்பல்கலைகளின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் கல்லுாரிகள், தனியார் கல்லுாரிகள் என ஆயிரக்கணக்கான கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன.பல்கலைகளில் தவிர, அதன்கீழ் இயங்கும் கல்லுாரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள், எம்.பில்., பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்புகள் பகுதி நேரம் மற்றும் முழு நேரமாக வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், தொலைமுறைக் கல்வி முறையிலும் பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.எம்.பில்., படிப்பு பகுதி நேரமாக இரண்டு ஆண்டுகளும், முழு நேரமாக ஓராண்டும் வழங்கப்படுகிறது. பிஎச்.டி., படிப்பு முழு நேரமாக குறைந்தபட்சம் மூன்றாண்டுகளும், பகுதி நேரமாக நான்கு ஆண்டுகளும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஆராய்ச்சி படிப்புகளுக்கான கல்வி கட்டணத்தை பல்கலைகள் உயர்த்தியுள்ளது, மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக, பாரதியார் பல்கலை பிஎச்.டி., பகுதிநேர கல்வி கட்டணத்தை 7,000 ரூபாய் வரையும், முழு நேரத்துக்கு 8,000 ரூபாய் வரையும் உயர்த்தியுள்ளது. இதேபோல், பிற பல்கலைகளும், கல்வி கட்டணத்தை உயர்த்தியுள்ளன. எனவே, உயர் கல்வியானது எட்டாக் கனியாக மாறும் நிலை உள்ளதால், பல்கலைகள் கல்வி கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்க மாநில துணைத் தலைவர் பிச்சாண்டியிடம் கேட்டபோது, ''மாநிலத்திலுள்ள பெரும்பாலான பல்கலைகளில் எம்.பில்., பிஎச்.டி., கல்வி கட்டணம், தற்போது 70 முதல் 80 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால், ஏழை, எளிய மாணவர்களுக்கு ஆராய்ச்சிப் படிப்பு என்பது கேள்விக்குறியாகிவிடும். எனவே, கல்வி கட்டணத்தை பல்கலைகள் குறைக்க வேண்டும். மேலும், மாநிலத்திலுள்ள அனைத்து பல்கலைகளிலும் ஒரே மாதிரியாக கல்வி கட்டணம் நிர்ணயிக்க உயர்கல்வித் துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.