நடுநிலைப்பள்ளிகளில் செஞ்சிலுவை சங்கம்; பள்ளி கல்வித்துறை உத்தரவு

மாணவர் மத்தியில் சேவை மனப்பான்மையை வளர்க்கும் விதமாக, நடுநிலைப்பள்ளிகளில் இளையோர் செஞ்சிலுவை சங்கம் அமைக்குமாறு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் செஞ்சிலுவை சங்கம் செயல்படுகிறது. இதில், திருப்பூர் மாவட்டத்தில் 8,400 மாணவர்கள்
உள்ளனர். நடுநிலைப்பள்ளிகளில் ஆறு, ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் மத்தியிலும் சேவை மனப்பான்மையை வளர்க்கும் விதமாக, இளையோர் செஞ்சிலுவை சங்கம் அமைக்க, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. சேவை, பெற்றோருக்கு உதவுதல், சமுதாய பணி மற்றும் முதலுதவி ஆகிய பண்புகளை, மாணவர் மத்தியில் வளர்க்க வேண்டும்; சுகாதாரம் பேணுதல், நட்புணர்வு, சேவை மனப்பான்மை, ஒழுக்கம், சுற்றுப் புறச் சூழல் மேலாண்மை, விபத்து நேரங்களில் முதலுதவி, பேரிடர் மேலாண்மை என மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவும், அந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாவட்டத்தில் உள்ள 267 நடுநிலைப்பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், பள்ளிக்கு ஒருவர் வீதம் செஞ்சிலுவை சங்க ஆலோசகராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளி யில், அவர்களுக்கு ஆலோசகர் பயிற்சி அளிக்கப்பட்டது.

இளையோர் செஞ்சிலுவை சங்க மாவட்ட அமைப்பாளர் மனோகரன் தலைமையில், பயிற்சியாளர்கள் பாலசுப்ரமணியம், அருள்மொழி, ஜெயிலானி ஆகியோர், செஞ்சிலுவை சங்க செயல்பாடு குறித்து பயிற்சி அளித்தனர். ஆலோசகர்கள் மூலம், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.சேவை மனப்பான்மை கொண்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, இளையோர் செஞ்சிலுவை சங்க உறுப்பினர்களாக சேர்க்கப்பட உள்ளனர். முப்பருவ கல்வி முறையில், பள்ளி இணை செயல்பாடு பிரிவில், சேவை பணிகளுக்கு மதிப்பெண் வழங்கப்படுவதால், செஞ்சிலுவை திட்டத்தில் சேவை செய்யும் மாண வர்கள், மதிப்பெண் பெற வாய்ப்புஏற்பட்டுள்ளது.