அரசு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி அதிகரிக்கும்!

'சிறப்பு வகுப்புகள் பயன்தரும்' என கல்வித்துறையினர் நம்பிக்கை
 
           'அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்காக, நடப்பாண்டின் துவக்கத்தில் பள்ளிக் கல்வித்துறை அறிவித்த, சிறப்பு வகுப்பு திட்டத்தின் மூலம், மாணவர்களின் தர மதிப்பீடு உயரும்; தேர்ச்சி சதவீதமும் அதிகரிக்கும்' என, கல்வித்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

         பொதுத்தேர்வுகளில், அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த, பள்ளிக் கல்வித்துறை புதுப்புது முயற்சிகளை கையாண்டு வருகிறது. 'ஆறு முதல் பிளஸ் ௨ வரை பயிலும் மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டின் துவக்கத்திலிருந்தே, சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும்' என, ஜூன் மாதம் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.அதன்படி, கோவை மாவட்டத்தில், 1090 ஆரம்பப்பள்ளிகள், 307 நடுநிலைப்பள்ளிகள், 185 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 306 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம், 1888 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அனைத்து பள்ளிகளிலும், ஆறு முதல் பிளஸ் 2 வரையில் படிக்கும் மாணவர்களுக்கான பாட அட்டவணை, நேர திட்டமிடல் உள்ளிட்ட பணிகள், அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் மூலம் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றன. 'இந்த முயற்சியின் மூலம், நடப்பாண்டு பொதுத்தேர்வுகளில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் கணிசமாக உயரும்' என, ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறையினர் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இது குறித்து ஒண்டிபுதுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை பாக்கியம் கூறியதாவது: கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு, முதல் பருவத்தேர்வு முடிந்ததும், சிறப்பு கவனம் செலுத்துவது வழக்கம். தற்போது அனைத்து மாணவர்களுக்கும், சிறப்பு வகுப்பு நடத்த அறிவிக்கப்பட்டுள்ள திட்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.சிறப்பு வகுப்புகளில், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, மாலை 4.30 - 5.00 மணி வரையில், தனித்திறமையை வளர்த்துகொள்ளக் கூடிய செய்முறை, கையெழுத்து வகுப்புகள், குழு மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்டவை அளிக்கப்படுகின்றன.பத்து முதல் பிளஸ் 2 வரையிலுள்ள மாணவர்களுக்கு தினமும் காலை 8.30 முதல் - 9.30 மணி வரையும், மாலை 4.30 - 5.30 மணி வரையும், பாட வாரியாக வகுப்புகளும், தேர்வும் நடத்தப்படுகின்றன. எங்கள் பள்ளியில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, மாலை நேர சிறப்பு வகுப்புகளில், 'ஸ்னாக்ஸ்' கூட வழங்குகிறோம். இத்தகைய முயற்சிகள் மூலம், மாணவர்கள் மத்தியில் பொதுத்தேர்வு பற்றிய பயத்தை போக்கி, 'அதிக மதிப்பெண் பெற முடியும்' என்ற நம்பிக்கையை ஏற்படுத்த முடிகிறது. இதன் மூலம், வரும் ஆண்டு அரசு பொதுத்தேர்வுகளில், தேர்ச்சி சதவீதம் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறுகையில், ''சிறப்பு வகுப்புகள் திட்டத்தின் மூலம் மாணவர்களின் தரம், தற்போது நடக்கவிருக்கும் காலாண்டு தேர்வின் முடிவில் தெரியவரும். ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியரும், சிறப்பு கவனம் செலுத்தி வருவதால் இத்திட்டம் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்துள்ளது,'' என்றார்.