கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்றவர்களுக்கு வழங்கப்படும் முதுநிலை பட்டப் படிப்பு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை அக்டோபர் 15-ஆம் தேதி வரை நீட்டித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.

உயர் கல்வி பெறுபவர்களை ஊக்குவிக்கும் வகையில், இளநிலை பட்டப் படிப்பில் பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெறும் மாணவர்களுக்கு, முதுநிலை பட்டப் படிப்புக்கான கல்வி உதவித்தொகையை மத்திய அரசு வழங்குகிறது. மாதம் ரூ. 2 ஆயிரம் வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
இதற்கு பல்கலைக்கழக மானியக் குழுவிடம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க செப்டம்பர் 15 கடைசி நாள் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இதற்கு விண்ணப்பிக்க அக்டோபர் 15-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுபோல், குடும்பத்தில் ஒரே பெண் குழந்தையாகப் பிறந்து, முதுநிலை பட்டப் படிப்பு மேற்கொள்பவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசமும் அக்டோபர் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.