
அறுபது ஆண்டுகளுக்கு முன்னர், ஒரே ஒரு பொதுக் கல்வித் துறை இயக்குநர்
இருந்ததிலிருந்து இன்று பள்ளிக் கல்வியில் மட்டும் 15-க்கு மேல்
இயக்குநர்கள் இருப்பது வளர்ச்சியின் அடையாளமாகக் கருதலாம்.
மாவட்டக் கல்வி அலுவலர், துணை இயக்குநர் நிலையில் இருந்த பணியிடங்கள் இன்று
இயக்குநர் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வி இயக்ககம் தரமான
கல்வி அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும், ஆண்டாய்வுகளை முறையாக மேற்கொள்ளவுமே
புதிய இயக்ககங்கள் உருவாக்கப்பட்டன.
தேர்வுத் துறை அவ்வாறு உருவாக்கப்பட்ட ஒன்றுதான். ஆனால், பள்ளிக் கல்வியகம்
காலாண்டு, அரையாண்டு, திருப்புத் தேர்வுகள் போன்று தேர்வுகளை நடத்துவதில்
அக்கறை காட்டிவருகிறது.
பருவத் தேர்வு விடைத் தாள்களையும் ஒரு பள்ளியினுடையதை மற்றொரு பள்ளி
ஆசிரியர்கள் திருத்த ஆணையிடப்பட்டுள்ளது. கற்பிக்கும் ஆசிரியருக்குத் தனது
கற்பித்தலில் உள்ள குறைகளை அறியவும், தாம் கற்பித்த மாணவர் செய்கின்ற
பிழைகளையும் அறியாது செய்துவிடும்.
தேர்வுகள் மாணவர்களுக்கு மட்டுமன்று, கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும்தான்.
விடைத்தாள் திருத்துதல் ஆசிரியர் வளர்ச்சியில் முக்கியமான அனுபவமாகும்.
பள்ளிக் கல்வித் துறை தனது முக்கியக் கடமையான ஆண்டாய்வுகளை முறையாகவும்
தவறாதும் நடத்துவதில் அக்கறை காட்டுவதன் மூலமே கீழ்வகுப்பினின்று
பள்ளியிறுதி வகுப்பு வரை தரமான கல்வி அளிக்கப்படுவதை நிறைவு செய்ய
முடியும்.