செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புப் பிடியில் மங்கள்யான்: இஸ்ரோ

இஸ்ரோவின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட வரைபடம்.
செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா அனுப்பியுள்ள மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புப் பிடியில் வந்துள்ளதாக இஸ்ரோ ஆராய்ச்சி மையம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இது, மங்கள்யான் திட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
இந்திய மக்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்கான 'மங்கள்யான்' விண்கலம் ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி-25 ராக்கெட் மூலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்டது.
செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் உள்ளதா என்பதை மங்கள்யான் விண்கலத்தின் மீத்தேன் சென்சார் கருவியும், கனிம வளங்களை தெர்மல் இன்பிரா-ரெட் இமேஜிங் ஸ்பெக்ட்ரோ மீட்டரும், வளி மண்டலத்தை லைமன் ஆல்பா போட்டோ மீட்டரும், நுண்ணிய துகள்களை எக்சோபெரிபிக் நியூட்ரல் கம்போசிசன் அனலைசரும் ஆராயும். செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு பகுதிகளை மார்ஸ் கலர் கேமரா பல கோணங்களில் படம் பிடிக்கும்.
இந்நிலையில், மங்கள்யான் விண்கலம் திங்கள் கிழமை காலை, செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புப் பிடியில் வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இஸ்ரோவின் (ISRO's Mars Orbiter Mission) பேஸ்புக் பக்கத்தில், "எங்கள் கணக்கின்ப்டி, மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புப் பிடியில் வந்துள்ளதாக தெரிவிக்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
மிக முக்கியமான 24-ம் தேதி:
மங்கள்யான் வேகத்தைக் குறைப்பதற்கென்றே மங்கள்யானில் லேம் (LAM) எனப்படும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரத்தை 24-ம் தேதியன்று இந்திய நேரப்படி காலை சுமார் 7-17 மணிக்கு இயக்குவார்கள். இந்த இயந்திரத்தை இயக்குவதற்கான ஆணை மங்கள்யானில் உள்ள கணிப்பொறியில் ஏற்கெனவே பதிவாகியுள்ளது. ஆகவே, குறித்த நேரத்தில் அது ஆணை பிறப்பிக்கும்.
ஒருவேளை அந்த இயந்திரம் செயல்படாமல் போனால், மங்கள்யான் செவ்வாயைச் சுற்ற முற்படாது. மாறாக, மங்கள்யான் அதே வேகத்தில் தன் பாதையில் செல்ல முற்பட்டு, சூரியனைச் சுற்ற ஆரம்பிக்கும். செவ்வாயில் உள்ள நிலைமைகளை ஆராய்ந்து தகவல் அனுப்ப வேண்டும் என்ற நோக்கம் ஈடேறாமல் போய்விடும். மங்கள்யான் திட்டம் தோல்வியில் முடியும்.
மங்கள்யான் சுற்றுவட்டப்பாதையை சீராக்கும் பணி வெற்றி
இந்த நிலையில், மங்கள்யான் சுற்றுவட்டப்பாதையை சீராக்கும் இறுதிகட்டப் பணி வெற்றிகரமாக நிறைவடைந்ததாக இஸ்ரோ ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட 'மங்கள்யான்' விண்கலம் இன்னும் 2 நாட்களில் செவ்வாய் சுற்றுவட்டப்பாதையை அடையவுள்ள நிலையில், மங்கள்யான் சுற்றுவட்டப்பாதையை சீராக்கும் பணி இன்று மேற்கொள்ளப்பட்டது. பிற்பகல் 2.46 மணிக்கு இந்த பணியை இஸ்ரோ மேற்கொண்டது. 4 நொடிகளுக்கு இந்த சீரமைப்புப் பணி நடைபெற்றது.
இதேபோல், கடந்த ஜூன் 11-ல் மங்கள்யான் சுற்றுவட்டப்பாதையை சீராக்கும் பணியை இஸ்ரோ வெற்றிகரமாக செய்து முடித்தது. இது குறித்து இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில், (மார்ஸ் ஆர்ப்பிட்டர் மிஷன் -MOM) தெரிவித்துள்ளது.
செவ்வாயை அடைந்தது அமெரிக்க விண்கலம்:
இந்தியாவின் மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புப் பியியில் வந்துள்ள நிலையில், செவ்வாய்கிரக ஆய்வுக்கு, இந்தியா மங்கள்யான் விண்கலத்தை அனுப்பி இரு வாரங்களில், அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, 'மாவென்' என்ற ஆய்வுக்கலத்தை அனுப்பியது. ஓராண்டுப் பயணத்திற்குப் பிறகு ஞாயிற்றுக் கிழமை இரவு 'மாவென்' விண்கலம், செவ்வாய் கிரகத்தைச் சென்றடைந்தது.
இதனை, நாசா ஆராய்ச்சி மையம் உறுதி செய்துள்ளது. 'மாவென்' வெற்றிக்கு இஸ்ரோ தனது பேஸ்புக் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளது.
செவ்வாய்கிரகம் தன் வளிமண்டலத்தை அடிக்கடி இழப்பது குறித்தும், செவ்வாய்கிரகத்தில் அதிகப்படியான நீர் இருப்பு குறித்தும் 'மாவென்' ஆய்வு செய்யும். 'மாவென்' ஆய்வுக்கலத்தில் எட்டுவிதமான ஆய்வு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.