மாணவர்களை குழப்பும் கல்வித்துறை

பத்தாம் வகுப்பு, சமூக அறிவியல், ஆங்கில வழி புத்தகத்தில், ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் பட்டியலில் இடம்பெற வேண்டிய நாட்டின் பெயரை விட்டுவிட்டு, இல்லாத நாட்டின் பெயரைச் சேர்த்து, கல்வித் துறை குழப்பம் செய்துள்ளது. மேலும், ஒரு உறுப்பு நாட்டின் பெயரை
சேர்க்கவும், கல்வித் துறை மறந்து உள்ளது.
சமச்சீர் கல்வி பாட திட்டத்தின் கீழ், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கியுள்ள சமூக அறிவியல், ஆங்கில வழி பாட புத்தகம், பக்கம் 46ல், ஐரோப்பிய யூனியன் அமைப்பில் இடம் பெற்றுள்ள உறுப்பு நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ஆஸ்திரியாவில் துவங்கி இங்கிலாந்து வரை, 27 நாடுகள் இடம் பெற்றுள்ளன. உண்மையில், 28 நாடுகள், உறுப்பு நாடுகளாக உள்ளன; குரேஷியா விடுபட்டுள்ளது.மேலும், 15வது உறுப்பு நாடாக, லைபீரியா குறிப்பிடப்பட்டுள்ளது. லைபீரியா, ஆப்ரிக்காவில் உள்ளது. லைபீரியாவிற்கு பதிலாக, லாட்வியா என்ற நாட்டின் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும்.
இப்படி குளறுபடியான தகவல்களை மாணவர்களுக்கு வழங்கியதன் மூலம் மாணவர்களும், தவறான கருத்துக்களை படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, ஆசிரியர் சிலர் கூறுகையில், 'மாணவர்களுக்கு, தவறான வரலாற்றை கூறக் கூடாது. இதில், எந்த சாக்கு போக்கும் கூறக் கூடாது. சாதாரண தவறு எனவும் கூறக் கூடாது. பாட புத்தகம் அச்சடிப்பதற்கு முன், ஒன்றுக்கு பலமுறை சரிபார்த்திருக்க வேண்டும்' என, தெரிவித்தனர்.

பாட புத்தகங்களை எழுதுதல் மற்றும் சரிபார்க்கும் பணியை, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் செய்கிறது. அந்நிறுவன வட்டாரம் கூறியதாவது:ஆசிரியர் குழுவினர், கவனமில்லாமல் செயல்பட்டதன் காரணமாக, இந்த தவறு நடந்துள்ளது. இந்த தவறை சரிசெய்ய, நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அடுத்த கல்வி ஆண்டில் வழங்கும் பாட புத்தகத்தில், சரியான கருத்துக்கள் இடம்பெறும் வகையில் பார்த்துக் கொள்வோம்.இவ்வாறு, நிறுவன வட்டாரம் தெரிவித்தது.