உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் நாளந்தாவை சேர்க்க முயற்சி

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் பழைய நாளந்தா பல்கலைக்கழகத்தின் கட்டிடத்தையும் சேர்க்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

இந்திய தொல்லியல் துறையின் சார்பில் உலக பாரம்பரிய சின்னங்கள் பரிந்துரைக் குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் நாளந்தாவைச் சுற்றியுள்ள பகுதிகளின் வளர்ச்சிக்காக, ஒரு செயல் திட்டத்தை (மாஸ்டர் பிளான்) தயாரிக்குமாறு பிஹார் மாநில அரசுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இதன் முதல்கட்டமாக நாளந்தாவைச் சுற்றிலும் 300 மீட்டர் சுற்றளவில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ‘தி இந்து’விடம் தொல்லியல் துறை கூடுதல் இயக்குநர் ஜெனரல் எம்.ஆர்.மணி கூறும்போது, “ஒரு புராதன கட்டிடம் அல்லது இடத்தை, உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டுமானால் அதற்கென சில விதிமுறைகள் உள்ளன. அந்த வகையில் நாளந்தாவை இந்தப் பட்டியலில் சேர்ப்பதற்கான முயற்சியாக, விதிமுறைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் முடிந்த பிறகு, அடுத்த மாதம் முதல் வாரத்தில் யுனெஸ்கோவுக்கு முறைப்படி கோரிக்கை வைக்கப்படும்” என தெரிவித்தார்.
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் நாளந்தாவை சேர்ப்பதன் மூலம் சிறப்பு நிதி உதவி கிடைக்கும்.
இந்த நிதியுதவி நாளந்தாவில் அகழ்வராய்ச்சி பணிகளை தொடர உதவியாக இருக்கும்.
அத்துடன் உலக சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் இடமாக நாளந்தா அமையும். இது பிஹார் மாநில வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.