அரசு பள்ளியில் இலக்கிய மன்ற செயல்பாடு; மாணவர்களின் திறனை வளர்க்க நிகழ்ச்சி

உடுமலை, போடிபட்டி அரசு நடுநிலைப்பள்ளியில், மாணவர்களின் கற்பனை திறனை வளர்க்கும் விதமாக இலக்கிய மன்ற செயல்பாடுகளை பயன்படுத்தி, பல்வேறு பயனுள்ள நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.
மாணவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்துவதன் பொருட்டு,
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இலக்கிய மன்ற செயல்பாடுகள் நடக்கின்றன. பெரும்பாலும், ஆரம்ப நிலை பள்ளிகளில், இச்செயல்பாடுகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை என கல்வித்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது.நடப்பு கல்வியாண்டில், அனைத்து பள்ளிகளிலும், வாரம் ஒரு முறை ஒவ்வொரு பாடங்களிலும், மாணவர்களுக்கு பயனுள்ள செயல்பாடுகளை நிகழ்த்த வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், பள்ளிகளில் இச்செயல்பாடுகள் பின்பற்றப்பட்டாலும், சில பள்ளிகளில் மட்டுமே பல்வேறு வித்தியாசமான நிகழ்ச்சிகளை நடத்தி, மாணவர்களை ஊக்கப்படுத்துகின்றனர்.அதில் ஒரு பள்ளியாக, உடுமலை, போடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இச்செயல்பாடுகளை பயன்படுத்தி, மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.
இப்பள்ளியில் 162 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அறிவியல், கணிதம், ஆங்கிலம், தமிழ் சமூக அறிவியல் பாடங்கள் என அனைத்து பாடங்களுக்கும் சுழற்சி முறையில், செயல்பாடுகள் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில், மாணவர்களுக்கு. சமூக கருத்துகளை உணர்த்துவது, சற்றுச்சூழலை பாதுகாப்பது, வாசிப்புத்திறனை வளர்ப்பது உள்ளிட்டவற்றை உணர்த்தும் வகையில், சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். மாணவர்கள் ஆர்வத்தோடு இச்செயல்பாடுகளில் பங்கேற்கின்றனர்.

தலைமையாசிரியர் லதா கூறியதாவது:ஆங்கில வகுப்பு நடப்பு கல்வியாண்டு முதல் துவக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆங்கில பாடத்தில் எழுத்து தேர்வு மட்டுமின்றி, உச்சரிப்புகளிலும் தேர்ச்சி பெறும் வகையில், தற்போது மன்ற செயல்பாட்டில், ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒரு வரைபடம் வழங்கப்பட்டு, அதிலுள்ள பொருள் பற்றி விளக்கமளிக்கும் போட்டி நடத்தப்பட்டது.அறிவியல் செயல்பாடுகளில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மரங்களை அழிவிலிருந்து காப்பது குறித்து மாணவர்களின் நாடகங்கள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு செயல்பாடுகளின் போதும், ஒவ்வொரு புதிய கருத்துகளை மாணவர்களுக்கு வலியுறுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.