'பிடிக்காத' நாட்டில் இருந்து வாழ்நாள் சாதனை விருதைப் பெற்ற கபில்தேவ்

1983ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பையை பெறும் கபில் தேவ். | கோப்புப் படம்.லண்டன் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய நட்சத்திர ஆல்ரவுண்டர் கபில் தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அளிக்கப்பட்டது.


இந்த விருதை இந்திய-ஐரோப்பிய வர்த்தக அமைப்பு வழங்கியுள்ளது. விளையாட்டுத் துறையில் கபில்தேவின் பங்களிப்புக்காகவும் குஷீ சொசைட்டி மூலம் ஏழை மற்றும் ஆதரவற்றோர் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு கபில் தேவின் பங்களிப்பை அங்கீகரித்தும் அவருக்கு நேற்று விருது அளிக்கப்பட்டது.

விருதை ஏற்றுக் கொண்டு பேசிய கபில்தேவ் “இந்தியனாக இருப்பதில் பெருமையடைகிறேன், இன்றைய தினம் இந்தியா உலக அளவில் எந்த நாட்டுடனும் வர்த்தகத்தில் ஈடுபடத் தயாராக இருக்கிறது” என்றார்.

பிறகு கொஞ்சம் நகைச்சுவை கலந்த ஜாலி மூடில், “எனக்கு இங்கிலாந்தை பிடிக்காது, காரணம் எங்கள் நாட்டை ஆட்சி செய்தார்கள், ஆனால் அவர்களால் சிறப்பாக ஆட முடியாத கிரிக்கெட்டை எங்களுக்கு அவர்கள் அளித்ததில் மகிழ்ச்சி, அதே சமயத்தில் அவர்கள் மூலம் வந்தடைந்த ஆங்கில மொழி, இதனை என்னால் சிறப்பாக பேச முடியாது” என்று கூறினார்.

இந்திய கிரிக்கெட்டிற்கு திருப்பு முனை ஏற்படுத்திய 1983 உலகக் கோப்பை வெற்றி கபில் இல்லையேல் இந்தியாவுக்கு இல்லை என்றே கூறலாம்.

உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன்பு 1982ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய அணி ஒரு நாள் போட்டி ஒன்றில் மேற்கிந்திய அணியைக் காய்ச்சி எடுத்தது. பெர்பைஸில் நடைபெற்ற அந்தப் போட்டியில் கவாஸ்கர் 90 ரன்களை விளாச கபில்தேவ் 36 பந்துகளில் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 72 ரன்களை விளாச இந்தியா 47 ஓவர்களில் 282 ரன்கள் எடுத்தது. கிளைவ் லாய்ட் கேப்டன்சியில் எந்த ஒரு அணியும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஓவருக்கு 6 ரன்கள் என்ற விகிதத்தில் ரன்களை அதுவரை எடுத்ததில்லை.

தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 255 ரன்கள் எடுத்து தோல்வி தழுவியது. கபில் கேப்டன்சியில் விழுந்த இந்த அடியை வெஸ்ட் இண்டீஸ் அணி அவ்வளவு எளிதில் மறக்கவில்லை. ஆட்டம் முடிந்தவுடன் கிளைவ் லாய்ட் தனது சகாக்களிடம் ‘இனி ஒருபோதும் இப்படி ஒரு தோல்வியை நாம் அடையக் கூடாது” என்று எச்சரித்தார்.

ஆனால்... எச்சரிக்கையால் பயனில்லை. 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் முதல் போட்டியிலேயே இந்தியாவிடம் பலமான வெஸ்ட் இண்டீஸ் அணி மீண்டும் தோல்வி தழுவி அதிர்ச்சியடைந்தது. இதன் தொடர்ச்சியாக லார்ட்ஸில் இறுதிப் போட்டியிலும் தோல்வி தழுவியது என்பது இப்போது வரலாறு.

ஜிம்பாவேயிற்கு எதிராக 17/5 என்ற நிலையிலிருந்து 175 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்த ஒருநாள் கிரிக்கெட்டின் அதிசயக்கத்தக்க இன்னிங்ஸையும் ஆடினார் கபில் தேவ்.

இன்றைய தினத்தில் சில பல இரட்டைச் சதங்களை இந்திய வீரர்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் அடித்திருக்கலாம்,ஆனால் கபில்தேவின் 175 நாட் அவுட் என்பதை எந்த ஒரு இன்னிங்ஸும் தூக்கியடிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்து யு.கே. கொண்டாடியதில் வியப்பேதும் இல்லை.