ஆசிரியர் நியமனத்தில் கமிஷன்? பணத்தை திருப்பித்தரும் இடைத்தரகர்கள்- இந்து தமிழ்

ஆசிரியர் தகுதித் தேர்வில் லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறியிருந்த இடைத்தரகர்கள், அந்த பணத்தை அந்தந்த ஆசிரியர்களிடமே திரும்ப ஒப்படைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வேண்டுமென பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


           வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்பட்ட ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் குறைந்த மதிப்பெண் பெற்ற பலரது பெயர்கள் இடம் பெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டு வெளியானது. மேலும் பணி நியமன உத்தரவு பெற்றுத்தருவதாகக் கூறி பலர் இடைத்தரகர்களாக செயல்பட்டு வருகின்றனர் என்று ஆசிரியர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டது. இதில் சேலத்தைச் சேர்ந்த ஒருவரும், கோவையில் உள்ள ஒருவரும் இடைத்தரகர்களாக செயல்படுகின்றனர் என கலை ஆசிரியர்கள் நலச் சங்கம் சார்பில் சென்னையில் காவல் துறை, மாவட்ட ஆட்சியரகம், லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியவற்றிடம் கடந்த 15-ம் தேதி புகார் அளிக்கப்பட்டது. இது குறித்த அன்றைய தினமே `தி இந்து’வில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து இணையதளங்கள் மற்றும் மற்ற நாளிதழ்களில் இந்த செய்தி வெளியானது.
       இந்நிலையில் கடந்த 17-ம் தேதி முதல் ஆசிரியர்களிடம் இருந்து பெற்ற பணத்தை இடைத்தரகர்கள் திருப்பி ஒப்படைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பணத்தைக் கொடுத்து விட்டு தங்களது தகவல்களை வெளியே கூறக்கூடாது. எங்களுக்கும், உங்களுக்கும் சம்பந்தமில்லை என இடைத்தரகர்கள் எழுதி வாங்கிச் செல்கின்றனர் என்றனர்.
இது குறித்து ஈரோட்டைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:
      தகுதித் தேர்வில் நான் பெற்ற மதிப்பெண் 91. எனது மதிப்பெண் மிகக் குறைவாகவே இருந்தது. மார்ச் முதல் வாரம் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.10 லட்சம் பெற்றனர். ஆனால், செப்.17-ம் தேதி எனது முழு பணத்தையும் திருப்பித் தந்துவிட்டனர். இவ்வளவு நாள் வேலை கிடைக்கும் என நம்பிக்கையில் இருந்தேன். பணத்தைக் கொடுக்கும் போது, எங்களுக்கும், உங்களுக்கும் எந்த சம்பந்தமில்லை என எழுதிக் கொடுக்க வற்புறுத்தினர். பணத்தை கலையரசன் என்பவரிடம் கொடுத்தோம். ஆனால் திருப்பிக் கொடுக்க வந்தவர்கள் வேறு நபர்கள் என்றார்.
       கலை ஆசிரியர் நலச் சங்க மாநிலத் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் கூறுகையில், தமிழகத்தில் கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் இரண்டு நாள்களாக இடைத்தரகர்கள் கொடுத்தனுப்பியதாகமுழுத்தொகையையும் சிலர் கொண்டு வந்து கொடுத்துச் செல்கின்றனர் எனப் பணம் கொடுத்த ஆசிரியர்களே கூறுகின்றனர். நாமக்கல் மாவட்டம் வாழப்பாடியில் ரூ.65 லட்சம் வரை இடைத்தரகர்கள் திருப்பிக் கொடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்றார்.